விஜயகாந்த் படத்தை கடைகோடி ரசிகனும் விரும்பிப் பார்க்க காரணமாக இருந்தது சண்டைக் காட்சிகள். 'லெக் பைட்' தமிழ் சினிமாவில் பிரபலமானதே விஜயகாந்தால்தான். ஓடிவந்து சுவரில் ஒரு காலை ஊன்றி எதிராளியை எகிறி அடிப்பது கேப்டனின் தனி ஸ்டைல். இந்தக் காட்சியில் விசில் அமர்க்களப்படும்.
ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐபிஎஸ் 1994 பொங்கலுக்கு வெளியானது. விஜயகாந்துக்கு வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சென்னையில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் போடும் திட்டத்தை முறியடிப்பார் விஜயகாந்த். அதில் இறந்து போகும் தீவிரவாதியின் சகோதரன் விஜயகாந்தையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க முயற்சிப்பான்.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் வழக்கம் போல் மிரட்டலாக இருக்கும். சமீபத்தில் ஏவிஎம் எம்.எஸ்.குகளின் மகள் அருணா குகன் சேதுபதி ஐபிஎஸ் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். கிளாக் டவரில் விஜயகாந்த் எந்த பாதுகாப்பு உபகரங்களும் இல்லாமல் ஏறுகிற காட்சியை அதில் நாம் பார்க்கலாம்.

அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தால் எலும்பு மிஞ்சாது. எனினும் டூப் போடாமல் விஜயாகாந்த் அதில் நடித்திருந்தார். இதுபோன்ற காட்சிகளில் டூப் போடுகிறவர்களுக்கே பாதுகாப்பிற்கு இடுப்பில் கயிறு கட்டுவார்கள். விஜயகாந்த் அந்த குறைந்தபட்ச பாதுகாப்பும் இல்லாமல் இந்தக் காட்சியில் நடித்திருந்தார்.
இதுபோல் அவர் நடித்தக் காட்சிகள் ஏராளம். இன்று ஏதாவது ஒரு நடிகர் இதனை செய்திருந்தால், வீடியோ வெளியீட்டு, பாருங்கள் எங்கள் நாயகனின் சாகஸத்தை என்று படத்திற்கு மைலேஜ் தேற்றியிருப்பார்கள். ஆனால், விஜயகாந்துக்கு இதெல்லாம் சாதாரணம்.
யூனிட்டில் உள்ளவர்களுக்கு என்ன உணவோ அதை மட்டுமே சாப்பிடுவது, கிடைத்த இடத்தில் உறங்குவது, யூனிட்டில் உள்ளவர்களுடன் சகஜமாக பேசி பழகுவது, தனது காட்சி முடிந்தாலும் கேரவனுக்குள் சென்று அடைக்கலமாகாமல் படப்பிடிப்புத்தளத்திலேயே இருப்பது என்று கேப்டனின் குணாம்சங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இதையும் படிங்க - ’புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மகனுக்காக கமர்சியல் குதிரையான கதை!
விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் ஆரம்பகாலம் தொட்டே ஏவிஎம்மின் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. 1980 இல் விஜயகாந்த் திரையில் அறிமுகமானதற்கு அடுத்த வருடமே ஏவிஎம் தனது சிவப்பு மல்லியில் அவரை நாயகனாக நடிக்க வைத்தது. அந்தப் படம்தான் அநீதியைக் கண்டு கோபம் கொள்ளும் இளைஞன் என்ற விஜயகாந்தின் திரைக்கதாபாத்திரத்தை வடிவமைத்தது. அதில் விஜயகாந்த் கம்யூனிஸ்டாக வருவார். அந்தப் படத்தின் வெற்றி காரணமாக விஜயகாந்தை வைத்து வெள்ளைப்புறா ஒன்று படத்தை ஏவிஎம் தயாரித்தது.
இதையும் படிங்க - மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து திடீரென விலகிய நெஞ்சுக்கு நீதி நடிகை
அதில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கும் கம்யூனிஸ்டுக்கும் சம்பந்தமில்லை. எனினும் கழுத்தில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் கொண்ட டாலரை அணிந்திருப்பார். அந்தக் காலத்தில் வெளிவந்த சிறந்த சண்டைப்படம் இது. கங்கை அமரன் இதனை இயக்கியருந்தார்.
விஜயகாந்த், பல்லவி நடித்த தர்ம தேவதை படமும் ஏவிஎம் தயாரிப்புதான். விஜயகாந்தின் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் அதேபாணியில் விஜயகாந்தை வைத்து எடுத்தப் படம் மாநகர காவல். அந்தப் படம் வெற்றி பெற, பி.வாசு இயக்கத்தில் சேதுபதி ஐபிஎஸ் படத்தை எடுத்தனர். இதுவும் 100 நாள்கள் ஓடியது.
இந்தப் படத்தில்தான் செந்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கவுண்டமணிக்கு ஆசை காட்டி இருந்த வேலையை விட வைக்கும் காமெடி வரும். கப்பல்ல என்ன வேலை என்பார் கவுண்டமணி. நடுக்கடலில் கப்பல் நின்னா இறங்கி தள்ளணும் என்பார் செந்தில். நான் இறங்கி தள்ளுனா என் சம்பளத்தை யார் வாங்குவா? ஏமாற்றப்பட்ட கவுண்டமணி திரும்பும் பழைய வேலையில் சேர்வது வயிறு நோக வைக்கும் காமெடி.
ஆக்ஷன், சென்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தும் கலந்து சேதுபதி ஐபிஎஸ்ஸை எடுத்திருந்தார் பி.வாசு. வில்லன் ஹீரோவின் தங்கையை காதலித்து மணந்து, கிளைமாக்ஸில் அவளை கூட்டு பாலியல் வன்முறைக்கு அனுமதிப்பதும், அவளை நாயகனின் மனைவியே சுட்டுக் கொல்வதும் ஓவர்டோஸ் சென்டிமெண்ட்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்பட்ட பெண்கள் உயிர் வாழக் கூடாதா என்ன? இந்தப் படத்திலும் ஹைலைட் விஜயகாந்தின் ஆக்ஷன் காட்சிகள்தான்.
ஒருகாலத்தில் பறந்து பறந்து சண்டையிட்ட விஜயகாந்த் இன்று நோயினால் முடங்கிப் போயிருப்பது காலத்தின் மிகப்பெரிய குரூரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.