• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நோட்டாவுக்கு வாக்களியுங்கள் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி வேண்டுகோள்

நோட்டாவுக்கு வாக்களியுங்கள் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி வேண்டுகோள்

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

2026-ம் ஆண்டில் மாற்றம் வர வேண்டு என்று விரும்பினால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதையறிந்த நடிகர் விஜய் தன் தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடா்பும் இல்லை. ரசிகர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து ஊடகங்கள் வாயிலாக தன்னிலை விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் 2021-ம் ஆண்டு பொங்கலுக்குப் பின் நல்ல அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்களாக என்னை நேசிக்கும் நண்பர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் என்னிடம் யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்கிறார்கள். சிலர் எங்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்கின்றனர்.

நான் சொன்ன ஒரே பதில் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்று வீட்டில் உட்கார்ந்து விடாதீர்கள். அது மிகவும் தவறு. நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது உங்கள் உரிமை. ஜனநாயக கடமையும் கூட. பணம் வாங்கிவிட்டு வாக்களிக்காதீர்கள். வாக்குக்காக பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். அதையும் மீறி கொடுத்தாலும் வாங்காதீர்கள். நாம் பிச்சைக்காரர்கள் அல்ல. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேள்வி கேட்பீர்கள்.

தனிப்பட்ட முறையில் நான் சொல்வது பெரும்பாலானோர் மாற்றம் வேண்டும். ஒட்டுமொத்த சிஸ்டத்திலும் மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார்கள். புதியவர்கள் வந்தால் தான் அனைத்திலும் மாற்றம் வரும். புதியவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் காமராஜர், அண்ணா போல் இருக்க வேண்டும். வாக்கு செலுத்தும் முன் காமராஜர், அறிஞர் அண்ணா, கக்கன் உள்ளிட்டோரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நேர்மையான, தூய்மையான, மக்களுக்காகவே உழைக்கக் கூடிய தன்னலமற்றவர்களாக ஆட்சிக்கு வருபவர்கள் இருக்க வேண்டும். நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. காமராஜர், அறிஞர் அண்ணாவை கட்சி தாண்டி அவர்களைப் போன்ற புதியவர்கள் வேண்டும் என்கிறேன்.



மாற்றத்தைக் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் பலர் அரசியலுக்கு வர பயப்படுகின்றனர். அவர்களை எப்படி வர வைப்பது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால் அதுவும் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்தால் அது மாற்றத்தை ஏற்படுத்த அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

பொதுவாக ஒரு தலைவன் தொண்டர்களை உருவாக்குவதை விட தொண்டர்கள் சேர்ந்து ஒரு தலைவனை உருவாக்கும் போது அது வலுவான, தெளிவான அமைப்பாகும். 2026-ம் ஆண்டு மாற்றம் நடக்க வேண்டும் என்று விரும்பினால் அதை தெளிவுபடுத்துங்கள். அப்படி சுமார் 1 கோடிக்கும் மேல் நோட்டாவில் ஓட்டு விழுந்தால் அத்தனை பேரும் மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும்

அப்போது காமராஜர், அண்ணா போன்ற தூய்மையான உங்களுக்காக உழைக்கக்கூடிய அரசியல்வாதியை நாம் நிச்சயம் கொண்டுவரலாம். 2026-ல் மாற்றம் வேண்டும் என்றால் அதற்கான அடிக்கல்லை இந்தத் தேர்தலில் பதிவு செய்யுங்கள். இதை சொல்வதால் எனக்கு எந்த பலனுமில்லை. மாறாக ஒரு சிலரின் கோபத்திற்குத் தான் ஆளாவேன். இருந்தாலும் உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா? இளைஞர்களே ஆழமாக யோசித்துப் பாருங்கள். சரி என்று பட்டால் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரிடமும் இதை சொல்லுங்கள்” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: