முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் சூடு பிடித்துள்ள ஜெய் பீம் பட வழக்கு!

மீண்டும் சூடு பிடித்துள்ள ஜெய் பீம் பட வழக்கு!

சூர்யா

சூர்யா

ஜெய்பீம் பட விவகாரத்தில் தங்களை கேட்காமல் தங்கள் கதையை படமாக எடுத்து விட்டார்கள் என தொடரப்பட்ட வழக்கில், SC/ST ஆக்ட் பிரிவில் ஏன் வழக்கு பதியவில்லை என கேள்வி எழுப்பி இடைநிலை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’. திரைப்படம், உலக அரங்கில் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. ஆதரவு கருத்துக்களை எப்படி இத்திரைப்படம் பெற்றதோ அதேபோன்று எதிர்ப்புகளும் வலுத்தன. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து உதவிகள் கிடைத்தன. ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன.

ஆனால், ராஜாக்கண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் என்பவர், தங்கள் அனுமதி இல்லாமல் தங்கள் வாழ்க்கையை திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் ஞானவேல் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கொளஞ்சியப்பன், கதாபாத்திரத்தை படத்தில் பயன்படுத்துவதற்காக தன்னிடம் ஞானவேல் அனுமதி பெற்றதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் படி, சாஸ்திரி நகர் போலீசார், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும், போலீசார் ஒருசார்பாக வழக்கை பதிவு செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியும் கொளஞ்சியப்பன் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இடைநிலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், நீதிமன்ற உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போது சூர்யா உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் சேர்க்கப்படாமல் தெரிந்தே விடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், SC/ST ஆக்டில் வழக்கை பதியாமல் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது சட்டப்படி குற்றம் என்பதால், வழக்கை முறைப்படி பதிவு செய்ய மறுத்த சாஸ்த்திரி நகர் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடைநிலை மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணை ஆணையர் தகுதிக்கு குறைவில்லாத தகுதியுடைய காவல்துறை அதிகாரி மூலமாக இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வழக்கு சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 சான்றாவணங்களை சாட்சியாக பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஜெய் பீம் படத்தின் மின்னணு படச்சுருள்கள், திரைக்கதைக்கான காப்புரிமை அனுமதிக்கடிதம், சட்டப்படியான வரவு செலவு கணக்குகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்ற வழக்கை நீதிமன்றம் கண்காணித்து உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு வழங்கி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. சட்ட விதிகளின் படி இந்த வழக்கு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பதால், நீதிமன்றம் கடுமை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைநிலை மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வரஉள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya