சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இந்த படம் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
கோபிநாத் எழுதிய அவரது சுயசரிதையான சிம்பிளி ப்ளை(simply fly) என்ற புத்தகத்தை ஆதாரமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விமான ஓட்டி கதாபாத்திரத்தில் சூர்யா கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். உடல் மொழியிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சூர்யா வெளிப்படுத்தியுள்ள நடிப்பு சூர்யாவை சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் மீண்டும் ஒருமுறை முன்னணியில் நிறுத்துகின்றது.

சூரரைப்போற்று
படம் நெடுக சூர்யாவை வைத்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பினை இயக்குனர் சுதா கொங்கரா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தந்தை மரணத்தின் போது விமானத்தில் பயணிக்க பணம் இல்லாததால் இறுதிச்சடங்கில் உரிய நேரத்திற்கு பங்கேற்க முடியாத சோகத்திற்கு ஆளாகும் காட்சியில் சூர்யாவும் சூர்யாவின் தாயாக நடித்துள்ள ஊர்வசியும் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு படத்தின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது.
குறைவான காதல் காட்சிகளே இடம் பெற்றாலும் படத்தின் கதையோட்டத்திற்கு அழுத்தமான காட்சிகளாக அவை அமைக்கப்பட்டிருப்பதும், அபர்ணாவின் துணிவான கதாபாத்திரமும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சூரரை போற்று திரைப்படத்திற்கு பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் ஜிவி பிரகாஷ் பலம் சேர்த்துள்ளார்.

சூரரைப் போற்று திரைப் படத்தில் நடிகர் சூர்யா
அமேசான் பிரைம் முன்னர் வெளியிட்ட பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு முதல் நேரடி பாராட்டு பெற்று தரும் திரைப்படமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க...
தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகிறது ‘கோட்டா’
இந்த படத்தில் பல காட்சிகள் விமான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகதோடு தொடர்பு உடையதாக உள்ளதால் சாமானியர்களுக்கு சற்று அந்நியப்பட்டு இருப்பது படத்திற்கு ஒரே குறையாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் சூரரை போற்று சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி இருக்கும் என்பதோடு பல விருதுகளையும் சூர்யாவிற்கு வென்று கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.