லாபம் ஈட்டும் வணிக சினிமா, நல்ல கருத்துக்களை பேசும் கலை சினிமா என தமிழ் திரையுலகம் திரைப்படங்களை இரண்டாக பிரித்து வைத்துள்ளது. இந்த 2 தளத்திலும் லாவகமாக பயணிக்க தெரிந்த வெகு சில நடிகர்களில் சூர்யா முக்கியமானவர். நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமான சூர்யாவிற்கு முதல் நான்கு ஆண்டுகள் மோசமானதாக அமைந்தது. உயரம், நடிப்பு என சூர்யாவின் திறமைகள் மீண்டும் மீண்டும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டே இருந்தன. இந்த சமயத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் சூர்யாவை ஒரு நல்ல நடிகனாக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் சூர்யாவின் வர்த்தக எல்லைகளை விரிவடைய வைத்தது. வர்த்தக ரீதியாக தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டாலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப் படங்களையும், நடிக்க வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரங்களையும் தேடித் தேடி நடிக்கத் தொடங்கினார் சூர்யா.
வாரணம் ஆயிரம், அயன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்திற்கு தன்னை மெருகேற்றி சூர்யா வெளிப்படுத்திய கடின உழைப்பு, ரசிகர்கள் பலருக்கும் தங்களையும் உறுதிப்படுத்தக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
தனது 25ஆவது திரைப்படமான சிங்கத்தில் நடித்த சூர்யா, தொடர்ச்சியாக சிங்கம் திரைப்படத்தின் அடுத்த இரண்டு பாகங்களிலும் நடித்து தனது வர்த்தக எல்லைகளை மேலும் விரிவுபடுத்திக் கொண்டார். திரைப்படம் கடந்து பொது வாழ்விலும் அதிகம் ஆர்வம் கொண்ட சூர்யா 2008ஆம் ஆண்டு அகரம் என்ற அறக்கட்டளை துவங்கி அதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வி பெற உதவி புரிந்து வருகிறார்.
மேலும் நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற அரசின் திட்டங்களின் போதும், அறிவிப்பின் போதும் அதன் மீதான தன் விமர்சனத்தை விருப்பு, வெறுப்பு இன்றி கடுமையாக சூர்யா வெளிப்படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமன்றி 2015ஆம் ஆண்டு முதல் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் சூர்யா இதன் மூலம் ராட்சசி, பசங்க-2 சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட நல்ல கருத்துள்ள படங்களையும் தயாரித்து வெளியிட்டார்.
Also read... வெளியானது யோகி பாபுவின் பொம்மை நாயகி படம் ஃபர்ஸ்ட் லுக்
சமீபத்தில் ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருப்பதில் தமிழகத்தைச் சேர்ந்த திரையுலகப் பிரபலங்களில் சூர்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகிறார். மேலும் சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் என சூரரைப்போற்று 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. சூர்யாவின் மிகப்பெரிய பிறந்த நாள் பரிசாக இந்த தேசிய விருதுகள் அறிவிப்பு வெளியாகி உள்ளது
ஆரம்பத்தில் பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு ஆளான ஒருவர் தன் கடின உழைப்பால் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சூர்யா ஒரு வாழும் எடுத்துக்காட்டு. சூர்யாவின் பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya