நடிகர் சூரியின் பணமோசடி புகாரில் விசாரணை அறிக்கை கேட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சூரியின் பணமோசடி புகாரில் விசாரணை அறிக்கை கேட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
நடிகர் சூரி
  • Share this:
நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் 'வீர தீர சூரன்' என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.

அப்போது நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. எனினும் பேசப்பட்டதன் அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்தனர். இந்நிலையில் நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்சினைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பித் தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாக தெரிகிறது.


ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் ரூ.40 லட்சம் மட்டும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொடுத்ததாகவும், மீதி தொகையான ரூ.2.70 கோடியை சூரிக்கு திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ஆம் தேதி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், இருவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading