உலகம் முழுவதும் மக்களின் இயல்புவாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டது கொரோனா எனும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் 25-ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பமுடியாமல் சிக்கித் தவித்தனர். பலர் நடந்தே சென்றனர்.
நெருக்கடியான காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்திலும், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்தும், அவர்களுக்கு உணவு வழங்கியும் பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் சிக்கித் தவித்த மாணவர்களும் தாயகம் திரும்ப உதவி செய்தார். மேலும் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
சோனு சூட்டின் உதவியை நினைத்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கிய சாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரமாண்ட பேனரை வைத்து வழிபட்டனர். கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர் என்று சோனு சூட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ள தொழிலாளர்கள், அவர் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்திய வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி இருந்தன.
கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு உதவிய நடிகர் சோனு சூட்டிற்கு ஐநா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இதையடுத்து பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விருது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் சோனு சூட், “ஐநா சபை என்னை கவுரவப்படுத்தியிருப்பது எனக்குக் கிடைத்த அங்கீகாரம். மிகவும் சிறப்பாக உணர்கிறேன். என்னால் செய்ய முடிந்த சிறிய உதவியை மக்களுக்கு செய்தேன். விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது மிகப்பெரிய கவுரவம்” என்று தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.