நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் (uzhavan foundation) சார்பில் வேளாண் மக்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் தனது தாய் குறித்து பேசும்போது மேடையிலேயே தேம்பி அழுதார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
நீர்நிலைமீட்பு, பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம்,சந்தைப்படுத்துதல் என விவசாயம் சார்ந்த புதுமைகளை விவசாயத்தில் உட்புகுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு விருதுகள் வழங்கபட்டது. தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், உழவர் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்திக் கூட ஏழை பெண் விவசாயியின் பேரன்தான். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது 10 மாதத்தில் அப்பா இறந்து போனார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் , எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார், அதனால் தான் இப்போது உங்கள் முன்னால் நிற்கிறேன் என்று தனது தாயை பற்றிக் கூறும்போதே சிவகுமார் கண்கலங்கினார்.
இதையும் படிங்க: இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்:உழவர் விருதுகள் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு
‘என் அம்மா எனக்கு தலை வாரிவிட்டதில்லை, உணவு ஊட்டிவிடவில்லை. தனி ஆளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார். விவசாயத்தில் அதிகமான வேலைகளை பெண்கள் தான் செய்கின்றனர். சிலையை தான் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்க்கவில்லை.பெண்கள் தான் கடவுள்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.