பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு நடிகர் சித்தார்த் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரின் கணக்கை உடனடியாக முடக்குமாறு ட்விட்டர் இந்தியாவை தேசிய மகளிர் ஆணையம் (NCW) கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என பலர் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால், 'எனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்தார்.
சாய்னாவின் அந்த ட்வீட்டுக்கு, “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார் நடிகர் சித்தார்த். இந்த ட்வீட்டிற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, "அவமரியாதைக்குரிய எதுவும் நோக்கமாக இல்லை” என்று குறிப்பிட்டார். ஆனால் சர்ச்சைகள் ஒன்றும் சித்தார்த்துக்கு புதிதல்ல. அப்படி அவர் சர்ச்சையில் சிக்கிய சில விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
நீட் தொடர்பாக பாஜக ஆதரவாளரை சாடினார்
கடந்த செப்டம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆர்வலர் தனுஷ், மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். பாஜக ஆதரவாளர் என்று கூறப்படும் ட்விட்டர் பயனர் ஒருவர் சித்தார்த்திடம், "நீட் தேர்வுக்கு திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது?" என்று கேட்டார். இதனால் கோபமடைந்த சித்தார்த், "உனக்கு தைரியம் இருந்தால் நீயே ஏன் கேட்கக் கூடாது, நான் என் வேலையைச் செய்கிறேன்" என்று கோபமாக பதிலளித்தது சர்ச்சையானது.
மறைமுகமாக சமந்தாவை சாடிய ட்வீட்
நாக சைத்தன்யா, சமந்தா விவாகரத்து அறிவிப்பு வந்ததும், "பள்ளியில் ஆசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று, 'ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்', உங்களுடையது என்ன?" என்று ட்விட்டரில் கேட்டிருந்தார் சித்தார்த். இதில் சமந்தாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதைப் பதிவிட்ட நேரம் சமந்தாவை சம்மந்தப்படுத்தியது.
இந்தி கட்டாயம் கற்க வேண்டுமா?
பாஜகவின் தீவிர விமர்சகராக அறியப்பட்ட நடிகர் சித்தார்த், புதிய கல்விக் கொள்கை 2019 (NEP) மூலம் இந்தி திணிப்பை எதிர்த்தார். ”தாய்மொழியாக தமிழ் பேசுபவர் இந்தி கற்றுக்கொள்வதற்கும், அதை படித்து தேர்வு எழுதுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நான் 5 மொழிகளில் பேசுகிறேன், 10 மொழிகளைப் புரிந்துகொள்கிறேன். நான் அவற்றைக் கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தப்படவில்லை. இந்தியா பெரும் மொழிகளின் கலவையாகும். அவற்றை அப்படியே விடுங்கள்” என்று தெரிவித்தார். அதோடு விடாமல், தமிழகத்தில் இருக்கும் யாரும் கட்டாயப்படுத்தி இந்தியைக் கற்கத் தேவையில்லை. தேவை ஏற்படும் போது, அவர்கள் அதைக் கற்றுக்கொள்வார்கள். வெளிநாட்டில் தொடர்பு கொள்ள விரும்பும் எந்தவொரு இந்தியரும் இந்திக்கு முன்னால் ஆங்கிலம் கற்பார்கள்" என்றார். இதனால் இந்தி திணிப்பை எதிர்க்கும் பிரபல்ங்கள் பட்டியலில் சித்தார்த் முதன்மையாக இணைந்தார்.
பிரதமரை தாக்கிய ட்வீட்
"தேநீரை வடிகட்ட சன்னி (வடிப்பான்) பயன்படுத்தப்படுகிறது. டீ விற்பவரை கட்டுப்படுத்த நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்?" என பஞ்சாபில் மோடி 15-20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதை குறித்து இந்த ட்வீட்டை பதிவு செய்தார்.
சந்தானம் டயலாக் மூலம் தனுஷை விமர்சித்த சித்தார்த்
2016-ஆம் ஆண்டில், தனுஷ் தனது ஹாலிவுட் அறிமுகமான "தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்" படத்தில் நடிக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, சித்தார்த் சந்தானத்தின் டயலாக்கான "நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்குற ஒரு தெருநாய்க்கு கெடைக்கணும்னு எழுதியிருந்தா, அதை யாராலயும் மாத்த முடியாது” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தனுஷ் மீது சித்தார்த் பொறாமை கொண்டதாக பொங்கி எழுந்தனர் தனுஷ் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Siddharth, Saina Nehwal