சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படங்களுள் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம். சந்தானம் நடித்த பல படங்கள் தயாராகியும் வெளிவராத நிலையில், சென்ற வருடம் தொடங்கப்பட்ட ஏஜென்ட் கண்ணாயிரம் குறித்த முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
ஏஜென்ட் கண்ணாயிரம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக். தெலுங்குப் படத்தில் நவீன் பொலிஷெட்டி நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரை முக்கியமான இளம் நடிகராக்கியது.
இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி ஒரு தனியார் துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார். பெட்டி கேஸ்களை துப்பறிந்து கொண்டிருந்த அவருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய கேஸ் கிடைக்கிறது. அதன் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கையில் எதிர்பாராத ரகசியங்கள் உடைபட ஆரம்பிக்கும். இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரை நகைச்சுவையுடன் எடுத்திருந்தது படத்துக்கு பிளஸ்ஸாக அமைந்தது. சந்தானம் இந்தப் படத்தை தேர்வு செய்ய படத்தில் நாயகன் செய்யும் நகைச்சுவையே பிரதான காரணம்.
லேப்ரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 21 நாளை காலை படத்தின் டீஸரை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஏஜென்ட் கண்ணாயிரத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை. வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கு முன் தெலுங்கில் வெற்றி பெற்ற கல்யாண ராமண்ணா படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்திருந்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற அந்தப் படம் ஓடவில்லை. இது அவர் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு ரீமேக். ஓடுமா என்பது சந்தானத்தின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.