அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்கள்

அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்கள்

விக்னேஷ் - ரஞ்சித்

நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட நடிகர் ரஞ்சித், விக்னேஷ் ஆகியோர் விருப்பமனு அளித்து நேர்காணலில் கலந்து கொண்டனர்.

  • Share this:
சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்த அமமுக பொது செயலாளர் அக்கட்சியின் வேட்பாளர்களிடம் விருப்பமனு பெற்று நேர்காணலில் ஈடுபட்டு வருகிறார். மொத்தம் 4191 விருப்பமனுக்கள் வந்திருக்கும் நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ரஞ்சித், விக்னேஷ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

நடிகர் ரஞ்சித் நமக்கு அளித்த பேட்டியில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருந்த தமிழகம் தற்போது ஆறு லட்சம் கோடி கடனில் இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாநிலமாக இருப்பதால் இந்த அரசும் ஆட்சியும் மாற்றப்பட வேண்டும். கோவை சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்காணலில் கலந்துகொண்டிருக்கிறேன். தலைமை எங்கு என்னை நிறுத்துகிறதோ அங்கு நிற்பேன்” என்று தெரிவித்தார்.

நடிகர் விக்னேஷ் கூறுகையில், “தாராபுரம் எனது சொந்த ஊர். அங்கு மக்களோடு மக்களாக தான் வாழ்ந்து வருகிறேன். அந்த பகுதி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தாராபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருக்கிறேன்” என்றார்.

சிந்துநதி பூ, நேசம் புதுசு, பாரதி கண்ணம்மா படங்களில் நடித்த நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். அதன்பின்னர் 2018-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவருக்கு அக்கட்சியில் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்து. இதையடுத்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததால் அக்கட்சியிலிருந்து விலகி அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நடிகர் விக்னேஷூம் அம்முகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: