ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியும் ரசிகனும்...!

ரஜினியும் ரசிகனும்...!

ரஜினி, முத்துமணி

ரஜினி, முத்துமணி

ஒரு தலைவரை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு முத்துமணி சிறந்த உதாரணமாக இருந்தார். அவரது மறைவை ஒட்டி எழுதப்பட்ட தகவல்களில் இன்னொன்று, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி பாடுகின்ற முத்துமணி சுடரே வா பாடல் அவரது ரசிகர் முத்துமணியை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பதாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :

ரஜினிகாந்தின் முதல் ரசிகர், ரஜினிகாந்த் பெயரில் முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தவர் நேற்று முன்தினம் காலமானார். முத்துமணி என்ற அந்த ரசிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர். ரஜினியை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கக்கூடிய அனுமதி பெற்றவர்.

முத்துமணியின் மறைவையொட்டி பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன. தனது முதல் ரசிகருக்கு, முதல் மன்றத்தை ஆரம்பித்தவருக்கு ரஜினி என்ன செய்தார் என்ற கேள்வி அதில் ஒன்று. இரண்டு வருடங்களுக்கு முன் முத்துமணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவரை சென்னை வரவழைத்து முறையான சிகிச்சை கிடைக்க செய்தார் ரஜினிகாந்த் என இந்த கேள்விக்கு பதிலடி கொடுத்திருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

முத்துமணி இன்று உயிருடன் இருந்திருந்தால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்திருக்க மாட்டார். ரஜினி ரசிகராக இருப்பதே அவருக்கு முழு திருப்தியை தந்திருக்கும்.  ரஜினி ரசிகர் என்பதைத் தாண்டி அவர் வேறு எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பெரும்பான்மையான ரஜினி ரசிகர்கள் எண்ணமும்,  எதிர்பார்ப்பும் அதுதான். ரஜினி கடைசி வரை அவர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பும், விருப்பமும் ஆகும்.

முத்துமணி மறைவையொட்டி பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன அதில் பல உண்மையானவை, பல பொய்யானவை. முத்துமணியின் தந்தை பிச்சை ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். ரசிகர் மன்றங்களுக்கு பெயர்போன மதுரையில்தான் முத்துமணி பிறந்தார். அப்போதெல்லாம் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை பிரேம் செய்து மன்றத்தின் பெயரை எழுதி வைப்பது வழக்கம். 1977 ஜூலை 29-ஆம் தேதி மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் ரஜினி நடித்த கவிக்குயில் திரைப்படம் வெளியானது. ரஜினியின் நான்காவது திரைப்படம் அது. அந்த காலத்தில் அத்திரைப்படத்தை ஸ்ரீதேவி யில் பார்த்த ரசிகர் ஒருவர், ரஜினியின் புகைப்படம் பிரேம் செய்து அங்கு வைக்கப்பட்டு இருந்ததாகவும், சூப்பர் ஸ்டார் ஆஃப் தி எரா ரஜினிகாந்த் ஃபேன்ஸ் அசோஷியேஷன் என ஆங்கிலத்தில் அதில் எழுதப்பட்ட இருந்ததாகவும் நினைவு கூர்கிறார்.

மன்றம் ஆரம்பிக்கப்பட்டதாக அதில் எழுதியிருந்த தேதி 10-02 -1976.  ரஜினியை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திய மூன்று முடிச்சு திரைப்படம் கூட 1976 அக்டோபரில் தான் வெளியானது. அதற்கு முன்பே முத்துமணி ரஜினிக்கு மன்றம் ஆரம்பித்திருக்கிறார். ரஜினியின் முதல் படம் அபூர்வ ராகங்கள் வெளியான போதே, அந்த படத்தில் இருந்தே முத்துமணி அவரது ரசிகராக இருந்தார் என்பது இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

அதேபோல் பைரவி படத்தின்போது ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் அடைமொழி கொடுத்து விளம்பரம் செய்தது தாணு.  அவர் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை முதன்முதலில் ரஜினிக்கு வழங்கினார் என்பது தான் இன்று வரை நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் 1977 லேயே ரஜினியின் முதல் ரசிகரும், முதல் மன்றத்தை ஆரம்பித்தவருமான முத்துமணி அவருக்கு அந்த பட்டத்தை அளித்து இருக்கிறார் என்பதும் இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இந்த உண்மை ரஜினிக்கும் தெரியும் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

ரஜினிக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகம் தாண்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவர்கள் பரவி இருக்கிறார்கள். கடல் கடந்து சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் தமிழர்கள் மட்டுமின்றி பல இனத்தை, பல மொழியை சேர்ந்தவர்களும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஜப்பானில் கணிசமான ரசிக திரள்  அவருக்கு உள்ளது. இந்த பெரும் நதிக்கு முதல் ஊற்றாக இருந்தவர் முத்துமணி. ரஜினியின் முதல் படம் அபூர்வ ராகங்களிலேயே ரஜினியை சரியாக கணித்து அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ரஜினியை பார்த்து இருக்கிறார்கள். ஆனால், அவருக்குள் ஒரு திறமையான  நடிகன் இருப்பதை அறிந்து வாய்ப்பு கொடுத்தவர் ஒரே ஒருவர் தான், பாலச்சந்தர். அதேபோல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து இருக்கலாம்.

ஆனால், அதில் சில நிமிடங்கள் வந்த ரஜினியை பார்த்து அவரை தனது தலைவராக வரித்துக்கொண்ட ஒரே ஒருவர் முத்துமணி மட்டுமே. இதிலிருந்தே அந்த ரசிகர் எத்தனை முக்கியமானவர் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதே முக்கியத்துவத்தை ரஜினியும் அவருக்கு அளித்து வந்தார். விஐபிகள் அவருக்காக காத்திருக்கும் போது எந்த முன் அனுமதியும் பெறாமல் வீட்டிலும், வெளியிலும் ரஜினியை சந்திக்க கூடிய உரிமை அவருக்கு இருந்தது. அவரது திருமணமும் கூட ரஜினி முன்னிலையில் தான் நடந்தது. அதுவும் அவரது வீட்டில்.

ஒரு தலைவரை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு முத்துமணி சிறந்த உதாரணமாக இருந்தார். அவரது மறைவை ஒட்டி எழுதப்பட்ட தகவல்களில் இன்னொன்று, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி பாடுகின்ற முத்துமணி சுடரே வா பாடல் அவரது ரசிகர் முத்துமணியை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பதாகும். ஆனால் அது தவறு. அது எதேச்சையாக நடந்தது. இதனை ரஜினி முத்துமணியிடம் கூறியதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also read... தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியும், நடிகருமான இந்த சிறுவனை தெரிகிறதா?

ஒரு ரசிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இறுதிவரை இருந்தவர் முத்துமணி. ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ரஜினி இருந்தாரா என்பது தான் இன்றைய விவாதப் பொருளாக இருக்கிறது. இதற்கு முத்துமணியிடமும், ரஜினியின் லட்சோபலட்ச ரசிகர்களிடம் கேட்டால் அவர்களது பதில் 100% ஆம் என்பதாகத்தான் இருக்கும். இதற்கு மேல் இந்த விஷயத்தில் சர்ச்சையை கிளப்ப எதுவுமில்லை.

First published:

Tags: Rajinikanth, Rajinikanth Fans