ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘அப்பா என்னைய அடிச்சு நொறுக்கிட்டாரு…’ – சிவாஜியுடனான நினைவுகளை பகிரும் இளைய திலகம் பிரபு…

‘அப்பா என்னைய அடிச்சு நொறுக்கிட்டாரு…’ – சிவாஜியுடனான நினைவுகளை பகிரும் இளைய திலகம் பிரபு…

சிவாஜி - பிரபு

சிவாஜி - பிரபு

சங்கிலி படத்திற்கு பின்னர் 1984-ல் வம்ச விளக்கு என்ற படத்தில் நானும் அப்பாவும் இணைந்து நடித்தோம். இந்த படத்தில் என்னுடைய முதுகில் அப்பா பிரம்பால் அடிக்கும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இளைய திலகம் பிரபு தான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தந்தையுடன் இணைந்து நடித்தது குறித்து சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

  இதுதொடர்பாக சமீபத்தில் பிரபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-1982 ஜனவரி 26 ஆம் தேதி எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கு கல்யாணம் முடிந்த பின்னர் தான் என்னை சினிமாவுக்கு குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர் என்பது ஒரு தகவல்.

  என்னுடைய மனைவி வந்த அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. பிப்ரவரி 26ஆம் தேதி என்னுடைய முதல் படமான சங்கிலி படத்தின் ஷூட்டிங் அருணாச்சலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்பா சிவாஜியுடன் இந்த படத்தில் நடித்தேன். மிக முக்கியமான காளி என்ற கேரக்டரில் நான் நடித்தேன்.

  இந்த படத்தில் அப்பா டி.எஸ்.பியாக நடித்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் என்னை சி.வி.ராஜன் அவர்கள் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவரை அண்ணன் என்று பாசமாக அழைப்பேன். என் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். இன்று நான் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அண்ணன் சி.வி. ராஜன் அவர்கள் தான்.

  கிருஷ்ணன் பஞ்சு எந்த அளவுக்கு அப்பாவுக்கு முக்கியமானவராக இருந்தாரோ, அந்த அளவுக்கு எனக்கு இருந்தவர் சி.வி.ராஜன். சங்கிலி படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் சண்டைஃக் காட்சிகளின்போது, என்னை அடிக்க வேண்டும் என்று அப்பா மனதில் நினைத்ததை எல்லாம், மனதில் வைத்து ஆசையை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டார். இந்தப் படத்திற்காக நான் ரூ.5,000  சம்பளமாக பெற்றேன்.

  சங்கிலி படத்திற்கு பின்னர் 1984-ல் வம்ச விளக்கு என்ற படத்தில் நானும் அப்பாவும் இணைந்து நடித்தோம். இந்த படத்தில் என்னுடைய முதுகில் அப்பா பிரம்பால் அடிக்கும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். இதற்காக 4 வாக்கிங் கம்புகளை அப்பா என்னை அடித்து உடைத்துவிட்டார்.

  உண்மையிலேயே அவர் என்னை சூட்டிங்கின்போது அடித்தார். மற்றவர்களை என்ன செய்வார் என்று எனக்கு தெரியாது. ஷூட்டிங் இடைவேளையின்போது, மகனே ஏதும் பிரச்சனையா என்று என்னிடம் கேட்டார்.

  நான் அவரிடம் அப்பா ஒண்ணும் இல்லை என்று சொல்லிவிட்டு, ரூமுக்குள் சென்று வலி தாங்க முடியாமல் கத்தி கதறினேன். இதனால் ஏற்பட்ட வீக்கம் எனக்கு ஒரு மாதத்திற்கு இருந்தது. என்னுடைய மனைவியிடம் நான் சொல்லிவிட்டேன் இதை யாரிடமும் சொல்லாதே என்று.

  ஒரு நாள் என்னுடைய அம்மா அந்த தழும்புகளை பார்த்துவிட்டார். பின்னர் நேராக அப்பாவிடம் சென்று மாமா ஏன் இப்படி பிரபுவை அடிச்சுட்டீங்க என்று கேட்டார். இதன் பின்னர் அப்பா என்னிடம் என்னடா ஆச்சு என்று கேட்டார். நான் அவரிடம் வீரத் தழும்புகள் அப்பா என்றேன். அதற்கு அவர் அப்படித்தாண்டா இருக்கணும் என்று பாராட்டினார்.இவ்வாறு பிரபு கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Prabu, Sivaji Ganesan