சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது உதயநிதி அமைச்சரானது, வாரிசு மற்றும் துணிவு போட்டி ஆகியவை குறித்து தனக்கே உரிய பாணியில் பேசினார்.
அவர் பேசியதாவது, ''தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் படத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம்.
இப்படத்திற்கு 21 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் திரும்பி வந்ததா என்பது பற்றி கவலையில்லை. படம் உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்துள்ளது. ரூ.75 லட்சத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு விழாவை நடத்த முடியாது. தமிழக அரசு நிதியை 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். தமிழ் சினிமாவின் பலமே படத்தின் கருதான். தமிழர்களின் அறிவுத்திறன், தரம் உயர்ந்தது. நிறைய திறமையாளர்கள் இருந்தாலும் அதிலும் திறமையானவர்கள் யார் என்பதை தேர்வு செய்வது கடினம்.
இதையும் படிக்க: YearEnder 2022: காதல் முதல் கல்யாணம் வரை... 2022-ல் திருமணம் செய்துக் கொண்ட பிரபலங்கள்!
வர்த்தக படங்கள் விருது படங்கள் என்று இருவகை உண்டு. கமர்ஷியல் படங்களுக்கு அதன் வருமானமே விருதுதான். உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது.அவரது தாத்தாவிடம் உள்ள திறமை ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண் சக்தி எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன். பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பிரச்னை வந்தால்தான் படமும் பிரபலமாகும். இதை எல்லாம் தாண்டி வருவதே ஒரு ஹீரோயிஸம்தான். வாரிசு படத்தை நான்முதலில் பார்ப்பேன் என்று சொல்வதற்கே ஒரு துணிவு வேண்டும். என் இரவின் நிழல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. மிகச் சரியான கணக்கு வந்தது. திரையரங்குகளில் இருந்து வரவேண்டிய பணம் உடனே கிடைக்கிறது. உதயநிதி அதிகாரத்திற்கு வந்தபிறகு நல்ல காரியம் நடந்துள்ளது.
உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தால் தமிழகத்தில் நிச்சயம் ஒரு சிறந்த அமைச்சராக வருவார். ஓடிடியிலும் பெரிய படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சினிமா திரையரங்குகளின் கையில் இருந்த சினிமா தற்போது ஓடிடி வசம் சிக்கிவிட்டது.
சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க வேண்டாம் என்று விஷால் சொன்னது. சிறிய படங்களை விற்பனை செய்யமுடியவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியிருக்கலாம். சின்ன படங்கள் தான் திரையுலகை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு சொல்பவை. குறைந்த செலவில் நல்ல படங்கள் எடுக்க முடிந்தால் அதுதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். சின்ன படங்கள் தவிர்க்க முடியாதது அதுதான் சினிமாவுக்கான வளர்ச்சி என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.