Actor Pandu: பாண்டு எனும் வரைபட கலைஞன்!

பாண்டு

வீடுகள், அலுவலகங்களில் வைக்கப்படும் உலோக எழுத்துக்களை சென்னையில் அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.

 • Last Updated :
 • Share this:
  கொரோனா இன்னும் எத்தனை கலைஞர்களை பழிவாங்கும் எனத் தெரியவில்லை. இன்று மேலுமொரு நடிகர், பாண்டு. தனது 74-வது வயதில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

  தமிழ் சினிமாவின் வளமான ஏரியா, நகைச்சுவை. கலைவாணர், சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என எத்தனை எத்தனை நடிகர்கள். எத்தனையெத்தனை பாணிகள். எல்லோரையும் போல பாண்டு தனி ரகம்.

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாண்டு. படிக்கிற போதே கலை மீது ஆர்வம். குறிப்பாக ஓவியக்கலை. அதன் காரணமாக சென்னை காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கிராப்டில் சேர்ந்தார். பாண்டுவின் சகோதரர் இடிச்சப்புளி செல்வராஜ் அப்போது பெயர் சொல்லும் நகைச்சுவை நடிகர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்தார். சகோதரர் சினிமாவில் இருந்ததால் 1970-ல் தனது 23-வது வயதில் மாணவன் படத்தில் தலைகாட்டினார் பாண்டு. அதுவொரு உதிரி கதாபாத்திரம். 1974-ல் எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது.

  எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவை தொடங்கிய போது அதிமுக கொடியை வடிவமைக்கும் பொறுப்பு பாண்டுவிடம் தரப்பட்டது. 1973-ல் வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் உள்பட பல படங்களுக்கு பாண்டு ஸ்டிக்கர்கள் வடிவமைத்திருந்தார். அந்தத் திறமையைப் பார்த்து கிடைத்ததே இந்த வாய்ப்பு. 1977-ல் அதிமுக தேர்தலை சந்தித்த போது இரட்டை இலை சின்னத்தை வரைந்து தந்ததும் பாண்டுவே.

  எழுத்துக்களை வடிவமைப்பதில் பாண்டு தனித்திறன் பெற்றிருந்தார். கேபிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை இதற்கென்று ஆரம்பித்தார். வீடுகள், அலுவலகங்களில் வைக்கப்படும் உலோக எழுத்துக்களை சென்னையில் அறிமுகப்படுத்தியவர் இவர் தான். அந்தத் தொழிலில் பிஸியாக இருந்த நேரம் 1981-ல் கரையோரம் செண்பகப்பூ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாண்டு என்ற நடிகரை தமிழகம் அடையாளம் கண்டு கொண்ட முதல் படமாக இது அமைந்தது. அதே வருடம் கமலின் கடல் மீன்களில் நடித்தார்.

  1990-ல் ரஜினியின் பணக்காரன், ராமராஜனின் பாட்டுக்கு நான் அடிமை, சத்யராஜின் நடிகன் என பாண்டுவின் திரைவாழ்க்கை பிஸியானது. 1992-ல் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்க பாண்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. வான்மதி படத்தில் அஜித்துடன் நடித்தார். இந்தப் படத்தில் இயக்குனர் அகத்தியனுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவர் காதல் கோட்டை எடுக்கையில் பாண்டுவுக்கு அதில் முக்கிய வேடம் தந்தார். குணச்சித்திர நடிகராகவும் தன்னால் மிளிர முடியும் என்பதை பாண்டு அதில் நிரூபித்தார்.

  மறக்க முடியாத இன்னொரு படம் கில்லி. விஜய்யின் படத்தை பிரகாஷ் ராஜ் சொல்லச் சொல்ல வரையும் காட்சி கிளாசிக் நகைச்சுவை. போக்கிரி படத்தில் லிப்ட் ஆபரேட்டராக ஒரேயொரு காட்சியில் வந்து அசத்தியிருந்தார். உடல், குரல் இரண்டிலும் குழைவை கொண்ட தனியான நகைச்சுவை பாண்டுவினுடையது. சிறந்த வரைகலை கலைஞன், நடிகன். மறைந்த பின்பே சிலரின் முக்கியத்துவம் அறிய நேர்வது துரதிர்ஷ்டம்.
  பாண்டுவுக்கு நம் அஞ்சலிகள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: