• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் மயில்சாமி தேர்தலில் சுயேட்சையாக போட்டி - ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் மயில்சாமி தேர்தலில் சுயேட்சையாக போட்டி - ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

  • Share this:
    தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான மயில்சாமி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகிய மயில்சாமி தன்னை எந்த ஒரு கட்சியிலும் இணைத்துக் கொள்ளவில்லை.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மயில்சாமி, “சென்னையில் 42 வருடமாக இருக்கிறேன். என்னுடைய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மனது இடம்கொடுக்கவில்லை. முதல்முறையாக விருகம்பாக்கம் தொகுதியில் நான் தனித்து போட்டியிடுகிறேன். நான் போட்டியிடுவதால் சில கட்சிக்காரர்கள் கோபமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் எந்தக் கட்சிக்கும் விரோதியல்ல.

    விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும் அதனால் களமிறங்கியிருக்கிறேன். இத்தொகுதி மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் போட்டியிடுகிறேன். ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றினால் அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கட்டுப்பட வேண்டும். யோசித்துப் பார்த்ததில் நான் என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு கம்யூனிஸ்ட் கட்சி பிடிக்கும். என்னுடைய அப்பா அந்தக் கட்சியில் இருந்தார். இப்போது அக்கட்சி வலுவில்லாமல் இருக்கிறது.

    ஓட்டுக்கு காசு கொடுப்பதும் வாங்குவதும் தவறு. காசு கொடுத்து பழகிவிட்டதால் தான் கட்சிகளுக்கு தேர்தல் செலவு அதிகமாகிறது. அரசியலில் இருப்பவர்கள் சாதி, மதத்தை சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்துக்காக கூட்டணி வைத்துக் கொள்ளாதீர்கள். அரசியலில் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறி விட்டு ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளாதீர்கள்.

    கமல்ஹாசன் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். அவருடன் நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆரைத் தவிர யாரையும் நான் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஓட்டு கேட்பதற்காக எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தமாட்டேன்.நான் தேர்தலில் போட்டியிட இருப்பதை பல பிரபலங்களிடம் தெரிவித்தேன். ரஜினிகாந்த் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்." இவ்வாறு நடிகர் மயில்சாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: