Home /News /entertainment /

Madhavan: 50 வயதைக் கடந்தும் பெண்களை வசீகரிக்கும் நடிகர் மாதவன்!

Madhavan: 50 வயதைக் கடந்தும் பெண்களை வசீகரிக்கும் நடிகர் மாதவன்!

மாதவன்

மாதவன்

மணிரத்னத்தை போலவே அழகியலான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கௌதம் இயக்கியிருந்த மின்னலே படத்தில் மாதவன் இன்னும் கூடுதலாக வசீகரித்தார்.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒரு நடிகர் காதல் மன்னனாக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவது உண்டு. அந்தவகையில் ஜெமினி கணேசன், கமல் ஹாசன், அஜித், அரவிந்த் சாமியை தொடர்ந்து புது நூற்றாண்டில் பெண்களின் கனவு நாயகனாக வந்தவர் மாதவன்.

1970-ம் ஆண்டு ஜம்செத்பூரில் வசித்த ஒரு தமிழ் குடும்பத்துக்கு மூத்த மகனாக பிறந்தவர் மாதவன். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற மாதவன், கல்லூரி சார்பாக இங்கிலாந்து, ஜப்பான் செல்லும் அளவு படிப்பில் படுச்சுட்டியாக இருந்தார். பின்னர் மாடலிங் துறையில் ஈர்க்கப்பட்டு, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன், அதில் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்துக்கு முதலில் மாதவனை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் ஆடிஷன் பார்த்த மணிரத்னம், இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மாதவனுக்கு வயது பத்தாது என கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

அதன்பின் 90-களின் இறுதியில் விளம்பரங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த மாதவன், சின்னத்திரை வட்டாரத்தில் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கினார். அந்த சமயம் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக மணிரத்னம் தயாரானார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட, பின்னர் அந்த கதையையே கொஞ்சம் மாற்றி ஷாருக்கான் ரோலில் மாதவனை நடிக்கவைத்து அந்த படத்தை வெளியிட்டார்.. அந்த படம்தான் ’அலைபாயுதே’.அலைபாயுதே படத்தில் மாதவனின் கதாபாத்திரமும் அவருடைய தோற்றமும் பெண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இதன் விளைவு ஒரே படத்தில் தமிழக பெண்களின் கனவு நாயகனாக மாறினார் மாதவன். இப்படத்தில் மாதவனின் சிரிப்புக்கு மயங்காத இளம் பெண்களே அந்நாளில் இல்லை எனும் அளவு அவருடைய வசீகர சிரிப்பும் தோற்றம் பெண்களை வெகுவாக கவர்ந்திருந்தது.அலைபாயுதே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் புது சாக்லெட் பாயாக வலம்வர தொடங்கினார் மாதவன். இளமை துள்ளும் காதல் கதைகளை வைத்திருந்த அத்தனை இயக்குனர்களும் மாதவனை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் அலைபாயுதேவுக்கு இணையாக அடுத்த ஆண்டே வெளிவந்து சக்கைப்போடு போட்ட இன்னொரு ரொமாண்டிக் படம் மின்னலே.மின்னலே படத்தின் கதையை முதலில் தனது குருநாதர் மணிரத்னத்திடம் சொல்லியிருக்கிறார் மாதவன். கதையை கேட்ட மணிரத்னம், இப்படத்தில் நடிக்க வேண்டாம் என மாதவனிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதையும் மீறி கௌதம் சொன்ன கதை பிடித்திருந்ததால் அந்த படத்தில் துணிச்சலுடன் நடித்தார் மாதவன். அவர் நம்பிக்கைக்கு பலனாக மின்னலே படம் மாதவனின் ஆல் டைம் பெஸ்ட் படமாக இன்று வரை கொண்டாடப்படுகிறது.இன்றும் பெண் ரசிகர்கள் மாதவனை அன்பாக அழைக்கும் ’மேடி’ எனும் புனைப்பெயர் மின்னலே படத்தில் கிடைத்தது தான். மணிரத்னத்தை போலவே அழகியலான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கௌதம் இயக்கியிருந்த மின்னலே படத்தில் மாதவன் இன்னும் கூடுதலாக வசீகரித்தார். கூடவே மின்னலே படம் பாக்ஸ் ஆபீஸிலும் வரவேற்பை பெற்றதால் ஒரேடியாக தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக மாதவன் உருவெடுத்தார்.

தொடர்ந்து மாதவன் நடித்த டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் அவரை சாக்லேட் பாய் எனும் வட்டத்துக்குள் சிக்க வைத்தது. ஆனால் தமிழில் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தவர்கள் பின்னாளில் காணாமல் போனார்கள் என்பதை உணர்ந்த மாதவன், உடனடியாக ஆக்ஷன் ரூட்டுக்குத் தாவ முயன்றார். இவர் எதிர்பார்த்தது போலவே ’ரன்’ படம் அமைய, அதன் வெற்றியின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

ரன் படம் வெளியான சமயம் ரஜினியின் பாபா படமும் திரைக்கு வந்திருந்தது. ரஜினி படம் என்பதால் பாபா படத்துக்கு அதிக திரையரங்குகளும் ரன் படத்துக்கு குறைவான திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஆனால் ரன் படம் வெளியானதும் வாய்வழி விமர்சனங்கள் மூலமாக இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைக்க, பாபா படம் ஓடிய திரையரங்குகளில் எல்லாம் ரன் படம் திரையிடப்பட்டன. அந்தவகையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினி படம் வெளியான சமயத்தில் அவரை தாண்டி வெற்றி பெற்ற நடிகர் எனும் சிறப்பு அம்சத்தை ரன் படத்தின் மூலம் அடைந்தார் மாதவன்.

முன்னணி நாயகனாக இருந்த போதே மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க மாதவன் தயங்கியதில்லை. 2003-ம் ஆண்டு கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் படம் முழுக்க அவருடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் பல காட்சிகளில் கமலுடன் போட்டி போட்டு நடித்து அவருக்கு இணையாக கைத்தட்டல் வாங்கினார்.

அன்பே சிவம் படம் பார்த்த அனைவரும் கமலுக்கு இணையாக மாதவனையும் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்துக்காக கமலுக்கு விருதுகள் கிடைக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் ஃபிலிம் ஃபேர் விருதையும் மாதவன் தட்டிச்சென்றார்.

மணிரத்னத்துக்கு ஒரு நடிகரை பிடித்துவிட்டால் அடுத்தடுத்து அவருடனே படம் செய்வது அவரது வழக்கம். அந்த வகையில் அலைபாயுதேவை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து படங்களிலும் மாதவனை நாயகனாக நடிக்க வைத்தார் மணிரத்னம். மாதவனின் மாறுபட்ட நடிப்பை இப்படங்கள் வெளிக்கொண்டு வந்தன. குறிப்பாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் மாதவன்.தனக்கு இளம் பெண் ரசிகர்கள் ஏராளமாய் உருவான காலக்கட்டத்தில் ஆயுத எழுத்து படத்தில் மொட்டைத் தலையுடன் முரட்டு குணம் கொண்ட ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பில் வேறொரு பரிணாமத்தை வெளிக்காட்டி இருப்பார் மாதவன். இதன் விளைவாக இப்படத்துக்காக சிறைந்த துணை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுனையும் மாதவன் வென்றார்.மாதவன் நடித்த படங்களின் பாடல்கள் எப்போதும் தனித்து பேசப்படும். அதற்கு அவருடைய திரை ஆளுமையும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். வணீக வெற்றி பெறாத அவருடைய பல படங்கள் அதன் பாடல்களுக்காக மட்டுமே தற்போது வரை மக்கள் மனதில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் – சரண் கூட்டணியில் 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ஜேஜே. வித்தியாசமான கதையமைப்பில் வெளியான இப்படம் மாதவனுக்கு இருந்த சாக்லேட் பாய் இமேஜை மேலும் வலுபடுத்தியது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் பெரும் வெற்றியை பெற்று படத்துக்கு பக்க பலமாக அமைந்தது.

2005-ம் ஆண்டுக்கு பின் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய மாதவன், அங்குள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து இரண்டாவது நாயகனாக நடித்தார். இதில் எத்தனை நாயகர்களுடன் இவர் சேர்ந்து நடித்தாலும் அதில் இவருடைய கதாபாத்திரம் தனித்து பேசப்படும் வகையில் அமைந்து இவரை அங்கும் பிரபலப்படுத்தியது.

2006-ம் ஆண்டு மாதவனின் கேரியரில் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்தியில் ரங்தே பசந்தி தமிழில் தம்பி என ஒரே ஆண்டில் இரண்டு மொழிகளில் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார். இதில் தம்பி படம் ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் தமிழில் மாதவனுக்கு பெயர் சொல்லும் ஒரு படமாக வெளியானது.

நடிப்பைத் தாண்டி கதை, வசனம் என அடுத்தடுத்த தளங்களில் பயணிக்கத் தொடங்கிய மாதவன், யாவரும் நலம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். தமிழில் பேய் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வித்தியாசமான ஹாரர் திரல்லராக வெளியாகி யாவரும் நலம், பாராட்டுக்களை அள்ளியது.

இந்தியில் இரண்டாம் நாயகனாக மட்டுமே நடித்து வந்த மாதவன், தனு வெட்ஸ் மனு படத்தின் மூலம் முன்னிலை நாயகனாகவும் நடித்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட அப்படத்தில் மாதவன் நடிக்க சம்மதித்தது பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்த படம் 200 கோடி வரை வசூல் செய்து மிரட்டிய போது கங்கனா ரனாவத்துக்கே அந்த பெருமை சேரும் என பெருந்தன்மையாக பேட்டிக் கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியில் பிஸி நடிகராக மாறிய பின் தமிழில் ப்ரேக் எடுத்துக் கொண்ட மாதவன், இறுதிச்சுற்று படத்தின் மூலம் அதிரடியாக கம் பேக் கொடுத்தார். தன்னுடைய சாக்லெட் பாய் இமேஜை தூக்கி எறிந்து, கரடு முரடான பாக்ஸிங் கோச் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்படம் ஒரேநேரத்தில் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகி இந்தியில் விமர்சன ரீதியாகவும் தமிழில் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்று அசத்தியது.

முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் சவாலை விரும்பி ஏற்கும் மாதவன், விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். படத்தில் தன்னை விடவும் விஜய் சேதுபதிக்கே அதிக முக்கியத்துவம் என்பதை உணர்ந்தும் தனி மனித வெற்றியை விட ஒரு நல்ல படத்தில் இடம்பெறுவதே முக்கியம் என அப்படத்தில் நடித்தார்.

விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டபோது இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிக்கவே எல்லா முன்னணி ஹீரோக்களும் தயாராக இருந்தார்கள். மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் தயக்கம் காட்டினார்கள். அந்தவகையில் தமிழில் துளியும் ஈகோ பார்க்காமல் அந்த கேரக்டரில் மாதவன் நடித்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது.எந்த ரிஸ்க்கையும் துணிச்சலுடன் எடுத்து பார்ப்பது மாதவனின் ஸ்பெஷாலிட்டி. அந்தவகையில் வெள்ளித்திரையில் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து கொண்டிருக்கும் அதே வேளையில் ப்ரீத் எனும் வலைத்தொடர் ஒன்றிலும் மாதவன் நடித்தார். இன்று முன்னணி நடிகர்கள் பலரும் வலைத்தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது மாதவனின் ப்ரீத் வலைத்தொடர்.

இந்தியா முழுவதுமே அறியப்படும் நடிகர் என்பதால் மாதவனின் படங்களுக்கு ஓடிடி தளங்களில் பெரும் டிமாண்ட் உள்ளது. அந்தவகையில் வெள்ளித்திரைக்காக இவர் நடித்த மாறா படத்தை பெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றி ஓடிடியில் வெளியிட்டது அமேசான் பிரைம் நிறுவனம். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற துல்கர் சல்மானின் சார்லி படத்தின் ரீமேக் என்பதால் துல்கர் கதாபாத்திரத்தில் மாதவன் எப்படி பொருந்தி போவார் என ரிலீஸுக்கு முன்பு பல யூகங்கள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இப்படத்தில் தனக்கேயுரிய பாணியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை குவித்தார் மாதவன்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலம் நடித்து வரும் மாதவன், ஒரு காதல் நாயகனாக மட்டுமே எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால் மாதவன் எனும் நடிகன் வசம் நான்கு ஃபிலிம் ஃபேர் விருதுகளுடன் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் உள்ளது. மாதவன் அறிமுகமான புதிதில் இன்னும் 2 ஆண்டுகளில் இவர் காலியாகிவிடுவார் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் 50 வயதை கடந்தும் பெண்கள் மனம் கவர்ந்த நாயகனாக அதே வசீகர புன்னகையுடன் அவர் வலம்வருகிறார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Madhavan

அடுத்த செய்தி