நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

நடிகரும் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவருமான கார்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் 80,90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும், தனது நவரச நடிப்பால் விரைவிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை எட்டினார்.

கார்த்திக் நடித்த படம் என்றாலே ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என பொழுது போக்கு அம்சங்களுக்கு பஞ்சமிருக்காது, என்ற நம்பிக்கை ரசிகர்கள் இடையே ஏற்பட்டது. 2004-ம் ஆண்டு வரை திரையில் பிஸி நடிகராக இருந்த கார்த்திக் அதன்பின் சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்புக்கு தென் மாவட்டங்களில் கூடிய பெரும் கூட்டம் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. இதில் உற்சாகமடைந்த கார்த்திக், அரசியலுக்குள் நுழைந்தார்.

2006-ம் ஆண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளராக பதவி பெற்ற இவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டுமென போராட்டம் நடத்தினார். 2009-ல் அக்கட்சியில் இருந்து விலகி, நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கியதுடன் மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

பின்னர், 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடனும், 2016ம் ஆண்டில் திமுக உடனும் கூட்டணி வைக்க முயன்றார். ஆனால், இரு பெரும் கட்சிகளும், ஆதரவு மட்டும் போதும் சீட் கிடையாது என கூறி கதவுகளை அடைத்தன.

தொடர்ந்து, 2018-ல் நாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்பதை தொடங்கினார். வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-வுடனே கூட்டணியை தொடர போவதாகவும் அதிமுக, பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய போவதாகவும் சமீபத்தில் கார்த்தி தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் அறிவுரையின்படி சில தினங்களாக ஓய்வில் இருப்பார் என உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: