அமெரிக்காவில் திரைத்துறை சம்பந்தமாக படித்து முடித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘மெட்ராஸ்’,‘காற்று வெளியிடை’, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.
தற்போது‘சுல்தான்’, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் கார்த்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில் இன்று தனது மகனுக்கு வைத்திருக்கும் பெயரை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்தி. அதில் குழந்தையின் கையுடன் ‘கந்தன்’ என்ற தமிழ்க் கடவுளின் பெயர் பொறித்த புகைப்படம் உள்ளது. மேலும், கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன் அப்பா.” என்றும் எழுதியுள்ளார் கார்த்தி.
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X
இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களுக்கும் கந்தனுக்கும் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் கார்த்திக்கும் - ரஞ்சனிக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2013-ம் ஆண்டு இத்தம்பதிக்கு உமையாள் என்ற பெண்குழந்தை பிறந்தது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.