• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சோப்பு வாங்கும் சாமானியர்கள் வரி செலுத்துகின்றனர்.. கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்..? - நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் கேள்வி

சோப்பு வாங்கும் சாமானியர்கள் வரி செலுத்துகின்றனர்.. கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள்..? - நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் கேள்வி

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று நடிகர் தனுஷூக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து  கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த  உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
பின்னர், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு  இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை விதிக்கக்கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய சொகுசு காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

Also Read : உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் - 17 பேர் குழு அறிவிப்பு

நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி,   மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும்,  அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாகவும்  தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் வசதி உள்ள நடிகர் தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறார் என குறிப்பிடாதது ஏன் என  கேள்வி எழுப்பினார். தான் ஒரு நடிகர் என்பதை ஏன் மறைத்தார் என விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் தனுஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தான் யார்? என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.

Also Read : தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்?

பின்னர் தன்னுடைய மனுவை வாபஸ் பெற்று கொள்வ அனுமதிக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பிறகும், இதுவரை நுழைவு வரி செலுத்தாமல் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். 50 ரூபாய்க்கு பெட்ரோல் மற்றும் சோப்பு வாங்கும் ஏழை, நடுத்தர மக்கள் கூட வரி செலுத்துவதை  சுட்டிக்காட்டிய நீதிபதி,  பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கலாம், ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முழுமையாக செலுத்த வேண்டும் என நீதிபதிஅறிவுறுத்தினார். நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் இறுதி உத்தரவிற்காக மீண்டும் பிற்பகல் தள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: