ரஜினி உண்மையில் எப்படிபட்டவர் தெரியுமா? - அனுபவம் பகிர்ந்த நடிகர் பாரதி மணி!
ரஜினி உண்மையில் எப்படிபட்டவர் தெரியுமா? - அனுபவம் பகிர்ந்த நடிகர் பாரதி மணி!
பாரதி மணி
பாபா படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில், ரஜினி தன்னை தேடி வந்து சந்தித்ததை பாரதி மணி சுவைபட எழுதியிருந்தார். பாபா மறுபடியும் வெளியாக இருப்பதாக செய்தி வந்திருக்கும் நேரம், பாரதி மணியின் பாபா அனுபவத்தை படிப்பது நல்ல அனுபவமாக இருக்கும்.
பாரதி மணியை நாடக நடிகர் என்று குறுக்கிவிட முடியாது. அவர் எழுத்தாளரும்கூட. அவர் உயிர்மையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பிறகு, புள்ளிகள் கோடுங்கள் கோலங்கள் என்ற முழுத் தொகுப்பு வெளியானது. பாட்டையாவின் பழங்கதைகள் என இன்னொரு புத்தகமும் அவரது எழுத்தில் வெளியானது. பாட்டையா என்பது இலக்கியவட்டத்தில் நெருக்கமானவர்கள் அவரை விளிக்கும் செல்லப் பெயர்.
பூர்ணம் விஸ்வநாதன், பம்மல் கே.சம்பந்த முதலியார், கே.பாலசந்தர், சோ, சி.சு.செல்லப்பா, இந்திரா பார்த்தசாரதி என பலருடைய நாடகங்களில் நடித்துள்ளார். 2000 முறைக்கு மேல் மேடையேறிய அனுபவம் உள்ளவர். ஞானராஜசேகரன் அவரை பாரதி படத்தில் பாரதியின் தந்தையாக நடிக்க வைத்தார். அதன் பிறகு பாரதி என்ற பெயர் அவரது இயற்பெயர் மணியுடன் சேர்ந்து பாரதி மணியானார்.
ஆட்டோகிராப், அந்தியன், புதுப்பேட்டை உள்பட பல படங்களில் பாரதி மணி நடித்துள்ளார். பாபா திரைப்படத்தில் ரஜினியால் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நேர்மையான அரசியல்வாதியாக நடித்தார். கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் தேதி வயோதிகம் காரணமாக பாரதி மணி இயற்கை எய்தினார்.
பாபா படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில், ரஜினி தன்னை தேடி வந்து சந்தித்ததை பாரதி மணி சுவைபட எழுதியிருந்தார். பாபா மறுபடியும் வெளியாக இருப்பதாக செய்தி வந்திருக்கும் நேரம், பாரதி மணியின் பாபா அனுபவத்தை படிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். இனி பாரதி மணி...
மைசூரில், முதல் இரண்டு நாள் ஷூட்டிங். பின் மூன்று நாள் கழித்துதான் ஷூட்டிங். நான் நிறையப் புத்தகங்களைக் கொண்டு போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கும். அறை மணி அடித்தது. யார் என்று திறந்து பார்த்தால் ரஜினி. பின்னால் அவரது புரொடக்ஷன் உதவியாளர்கள்.
"ஐயா... எல்லாம் வசதியாக இருக்கிறதா?" என்கிறார் தனக்கே உரிய புன்சிரிப்புடன். "இதைக் கேட்க நீங்களே வரவேண்டுமா? அதான் ஆட்கள் இருக்கிறார்களே" என்றேன். "அதில்லைங்க ஐயா. உங்களுக்கு மூணு நாள் ஷூட்டிங் இல்லை. வெள்ளிக்கிழமைதான் ஷூட்டிங். க்ளைமாக்ஸ் எடுக்கிறோம். 5000 ஜூனியர் ஆர்டிஸ்டும் நடிக்கிறாங்க. அதான் அதை நேர்ல உங்களுக்குச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். ஒண்ணும் வசதிக் குறைச்சல் இல்லையே?" என்றார்.
"ஐயோ. ஒண்ணும் இல்லை. எல்லாம் நல்லா கவனிச்சிக்கிறாங்க. ஒரு பிரச்சனையும் இல்லை" என்றேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ரஜினி, அப்படி அந்த நேரத்தில் வந்து என்னிடம் கேட்க வேண்டிய தேவையே இல்லை. ஆனால் கேட்கிறார். அது மட்டும் அல்ல. ரஜினி உண்மையில் மிக அற்புதமான மனிதர்.
நான் முதல் நாள் ஷூட்டிங் போனது முதல் என்னிடம் கையைக் கட்டிக் கொண்டு, ஐயா, ஐயா என்று மரியாதையாக இருப்பார். சுற்றிலும் ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருடன் கைகுலுக்க, பேசக் காத்துக் கொண்டிருக்கும் போதும் அப்படித்தான் பணிவாக நடந்து கொள்வார்.
இதை என்னவென்று சொல்வது? அவருடைய பெருந்தன்மையா, பணிவா, அக்கறையா? என் மீதான மதிப்பா? - இப்படி கேள்வியோடு முடித்திருந்தார் பாட்டையா. அவரது எழுத்திலிருந்து கிடைக்கும் ரஜினி, அவரது எதிரிகளும் மதிக்கும் குணநலன்களை கொண்டவர். உயர்வு வருகையில் பணிவும் வர வேண்டும் என்பதை பொதுவாழ்வில் கடைபிடிக்கிறவர் ரஜினி என்பதற்கு பாரதி மணியின் பாபா அனுபவக் குறிப்பு ஓர் சான்று.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.