அதர்வா நடிப்பில் எட்டு தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதர்வா படம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் குருதி ஆட்டம் திரைப்படம் ஆக்ஷன் திரைப்படம் தான், ஆனால் அதை தாண்டி எமோஷனல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கு காரணம் ஸ்ரீ கணேஷ். இந்த திரைப்படத்திற்காக பல கதைகளை விவாதித்து இறுதியில் குருதி ஆட்டம் திரைப்படத்தின் கதை தேர்வானது என தெரிவித்தார்.
அதேபோல் தன்னால் முடிந்த அளவிற்கு ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கதை தேர்வு செய்வதால் தான் கொரோனா காலத்திற்கு பிறகு தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் சூழல் இருந்தாலும், அவை ஒரே வகை படங்களாக இல்லாமல் இருக்கின்றன என கூறினார். குருதி ஆட்டம் படத்தின் கதை பல மாதங்களாக எழுதப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் அதிக மாதம் எடுத்துக் கொண்டது நல்லது தான் என தற்போது தோன்றுகிறது என அதர்வா கூறினார்.
இந்த திரைப்படத்தில் பத்து கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. குறிப்பாக ராதிகா உள்ளிட்ட பலருக்கு பின் கதைகள் இருக்கின்றது. அதுதான் குருதி ஆட்டத்தின் சிறப்பு அம்சம். பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால், நடிக்கும் போதும் போட்டி இருந்தது. அது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது என தெரிவித்தார். அதேபோல் இந்த திரைப்படத்தில் அஜித் ரசிகராக தான் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் மல்டி ஸ்டார் திரைப்படங்களில் நிச்சயம் நடிப்பேன். நான் நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் மல்டி ஸ்டார் படம்தான், கதை தான் முக்கியம். கதை சிறப்பாக அமைந்தால் நிச்சயம் அந்த வகை திரைப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்தார். அதேபோல் ஓ.டி.டி திரைப்படங்களிலும் நடிப்பேன் திரையரங்கு என்பது ஒரு சிறந்த அனுபவம், அதே போல் ஓ.டி.டியில் படம் பார்ப்பவர்கள் தங்களுக்கு வசதியான இடங்களில் இருந்து பார்க்கின்றனர். நான் இரண்டையும் ஒன்றாக தான் பார்க்கிறேன் எனவும் ஓ.டி.டி. படங்களிலும் நடிப்பேன் எனவும் அதர்வா கூறியுள்ளார். அத்துடன் குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசரை பார்த்து விட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டினார். அது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதே போன்ற வரவேற்பு படத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என அதர்வா கூறினார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.