• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆர்யா மன்னிப்பு கேட்டதால் அவன் இவன் பட வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம்

ஆர்யா மன்னிப்பு கேட்டதால் அவன் இவன் பட வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம்

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்டதால் அவன் இவன் பட வழக்கு சமாதானமாக முடித்து வைக்கப்பட்டது.

  • Share this:
ஆர்யா, விஷால் நடித்து பாலா இயக்கிய 'அவன் இவன்' திரைப்படம் 2011-ல் வெளியானது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் அம்பாசமுத்திரம் சிங்கம்பட்டி ஜமீனை மையமாகக் கொண்டு அவர் போன்று ஒரு நடிகரை நடிக்க வைத்திருந்தார் பாலா.  ஜமீனை தரக்குறைவாக விமர்சித்து படமாக்கப்பட்டிருந்ததாக படம் வெளியானபோது விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதியின்  மகன் சங்கர்  ஆத்மஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இடையில் வழக்கில் ஆஜராக ஆர்யா மற்றும் பாலாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த  நிலையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நடிகர் ஆர்யா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன் ஆர்யாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அவரது வழக்கறிஞர் ஆஜராகி திரைப்பட படப்பிடிப்பில் வெளியூரில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனவே பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட  கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார்.



இதன் அடிப்படையில் இன்று காலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை மதியம் எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். மீண்டும் மதியம் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்ந்த ஜமீன்  தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

நடிகர் ஆர்யா மன்னிப்பு கோரினால்  வழக்கு வாபஸ் பெறுகிறீர்களா என நீதிபதி ஜமீன் தரப்பிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவே நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதனையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஆனால் இயக்குநர்  பாலா மீதான வழக்கு தனியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் அனைத்து காட்சிகளையும் ஜமீன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் படமாக்கி விட்டு அந்த ஜமீனை விமர்சித்து அவரை ஒரு காமெடியனை போல  படத்தில் காட்சிப்படுத்தி இருந்ததால் ஜமீன் குடும்பத்தார் மனதளவில் பாதித்திருப்பதாகவும் எனவே பாலா மீதான வழக்கை வாபஸ் பெற இயலாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் பாலா மீதான வழக்கு தனியாக நடத்தப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: