தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அஜித். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வபோது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் இதே போல் கடந்த வாரம் நடிகர் அஜித் வாடகை காரில் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்ட காவலர்கள் மற்றும் புகாரளிக்க வந்த பொதுமக்கள் பலர் ஒன்று கூடி அவருடன் செல்ஃபி எடுத்ததால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் நடிகர் அஜித்திற்கு காவலர்கள் வழி சொல்லி அனுப்பி வைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியது.
இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதற்காக இன்று காலை பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்தார். அப்போது அங்கு எஸ்.ஐ. தேர்வுக்கான நேர்முக தேர்வு நடைபெற்று வந்ததால் கலந்து கொள்ள வந்த நபர்கள் அஜித்தை பார்ப்பதற்காக ஒன்று கூடி நின்றனர்.
நடிகர் அஜித் ரைஃபிள் கிளப்பிற்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து அருகே இருந்த ரசிகர்கள் பலரும் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.மேலும் பயிற்சி முடித்து வரும் போது நடிகர் அஜித்துடன் செஃல்பி எடுக்க நீண்ட நேரமாக ரசிகர்கள் காத்திருந்தனர்.
சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்ட நடிகர் அஜித் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றார். நீண்ட நேரமாக காத்திருந்து நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.