Home /News /entertainment /

66 வருடங்களுக்கு முன் ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுத்த தமிழ்ப் படம்

66 வருடங்களுக்கு முன் ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுத்த தமிழ்ப் படம்

ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுத்த தமிழ்ப் படம்

ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுத்த தமிழ்ப் படம்

மேற்கில் உதயமான பல படைப்புகள் தமிழில் தழுவப்பட்டு தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளாகவே இன்று கருதப்படுகின்றன. அதற்கு அமரதீபம் ஓர் எடுத்துக்காட்டு.

  • News18
  • Last Updated :
எல்லா காலகட்டங்களிலும் மாறாத புலம்பல் ஒன்று உண்டு.  "அந்தக் காலத்துல எல்லாம் எப்படி இருந்திச்சி தெரியுமா? இப்போ எல்லாமே சீரழிஞ்சுப் போச்சி."

பல நூற்றாண்டுகளுக்கு முன், சாக்ரடீஸ் காலத்திலிருந்தே இப்படி பழங்காலத்தை பொற்காலமாக எண்ணி நிகழ்காலத்தை பழித்து வருகிறார்கள். சினிமாவை குறித்து உரையாடினால் அங்கேயும் இந்த பழம்பெருமை குடியேறும். "அந்தக்கால படம் இருக்கே, அப்படியே நம்ம கலாச்சாரத்தை பிரதிபலிக்கும். இப்பவும் எடுக்கிறாங்களே... ம்ஹும்... ஹாலிவுட்டை காப்பியடிச்சி..."

அவர்கள் சொல்லும் அந்தக் காலத்தில் பத்தில் நான்கு படங்கள் மேற்கத்திய நாவலையோ, சினிமாவையோ தழுவி எடுக்கப்பட்டதாக இருக்கும். ஒன்று நேரடியாக தழுவியிருப்பார்கள். இல்லை, இந்தி, வங்காள மொழியில் தழுவியதை இவர்கள் தழுவியிருப்பார்கள். 66 வருடங்களுக்கு முன்னால், ஜுன்; 29 ஆம் தேதி சிவாஜி நடிப்பில் அமரதீபம் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்துடன் 100 நாள்கள் ஓடியது. படத்தின் வித்தியாசமான  கதையும், கச்சிதமான திரைக்கதையும், சுவாரஸியமான காட்சிகளும், சிவாஜி, சாவித்ரி, பத்மினியின் நடிப்பும் பாராட்டப்பட்டன. இந்தப் படம் 1942 இல் வெளியான ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது படம் வெளியான போது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.அமரதீபம் படத்தில் சாவித்ரி பணக்காரவீட்டுப் பெண்ணாக வருவார். அவரை நம்பியாரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவார்கள். பிறரிடம் அதிகாரம் செலுத்தும் நம்பியாரை சாவித்ரிக்கு பிடிக்காது. வீட்டைவிட்டு வெளியேறுவார். அவருக்கு சிவாஜி உதவி செய்வார். இந்நிலையில், தலையில் படும் அடியால் சிவாஜிக்கு பழையவை மறந்து போகும். அவர் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்த பத்மினியை காதலிப்பார். ஆனால், சாவித்ரியால் சிவாஜியை மறக்க முடியாது. இறுதியில் இவர்கள் சந்திக்கையில் சிவாஜிக்கு பழைய நினைவுகள் திரும்ப கிடைத்தனவா, அவர் சாவித்ரியை அடையாளம் கண்டு கொண்டாரா, யாருடன் அவர் இணைந்தார் என்பது கிளைமாக்ஸ்.படம் வெளியான 1956 இல் இப்படியான வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்கள் வெளிவரவில்லை. வீட்டைவிட்டு வெளியேறும் பணக்காரப்பெண் என்ற சித்திரம் இன்றுவரை தொடர்ந்து சினிமாவில் பயன்படுத்தப்பட இந்தப் படமே துவக்கமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதை, வசனத்தை சி.வி.ஸ்ரீதர் எழுத, தெலுங்குப்பட இயக்குநர் பிரகாஷ் ராவ் படத்தை இயக்கினார்.அமரதீபம்  படத்தின் கதை 1942 இல் வெளியான ரான்டம் ஹார்வஸ்ட் ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதே பெயரில் ஜேம்ஸ் ஹில்டன் எழுதிய நாவலை தழுவி ஹாலிவுட் படத்தை எடுத்திருந்தனர். ஸ்ரீதர் அதனை தமிழுக்கேற்ப மாற்றி எழுதினார். அதுவே அமரதீபம் என்ற படைப்பானது. இதனை தெலுங்கில் 'டப்' செய்து வெளியிட்டனர். 1958 இல் அமர்தீப் என்ற பெயரில் இந்தியில் இதனை ரீமேக் செய்தனர்.சலபதி ராவும், ஜி.ராமநாதனும் படத்துக்கு இசையமைத்தனர். தஞ்சை என்.ராமையா தாஸ் எழுதி, ஜிக்கி பாடிய ஜாலிலோ ஜிம்கானா.. பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் இடம்பெற்ற இன்னொரு சூப்பர் ஹிட் பாடலான, தேனுண்ணும் வண்டு மாமலரை கண்டு... பாடலை கே.பி.காமாட்சி சுந்தரம் எழுதியிருந்தார். இந்தப்  படம் சென்னையில் வெளியான திரையரங்குகளில் கேஸினோ திரையரங்கும் ஒன்று. அன்று சென்னையில் இயங்கி வந்த திரையரங்குகளில் இன்றும் தொடர்ந்து இயங்கிவரும் ஒரே திரையரங்கு கேஸினோ என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... ஒரு நாயகன் உதயமாகிறான் - சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கான கையேடுமேற்கில் உதயமான பல படைப்புகள் தமிழில் தழுவப்பட்டு தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளாகவே இன்று கருதப்படுகின்றன. அதற்கு அமரதீபம் ஓர் எடுத்துக்காட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி