ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலாவின் ஆரம்பகால திரைப்படங்கள் ஒரு விமர்சனப் பார்வை

பாலாவின் ஆரம்பகால திரைப்படங்கள் ஒரு விமர்சனப் பார்வை

பாலா

பாலா

பாலாவின் குருவும், மறைந்த  இயக்குநருமான பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த பத்து உலக சினிமாக்களில் ஒன்றாக பிதாமகனை குறிப்பிட்டார். பாலா படவிழாவில் கலந்து கொண்ட மணிரத்னம், 'நான் இங்கு விருந்தினராக வரவில்லை, பாலாவின் ரசிகனாக வந்திருக்கிறேன்' என்றார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 4 minute read
  • Last Updated :

பாலாவின் திரைப்படங்கள் குறித்தும், திரை ஆளுமை குறித்தும் அறியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. பாலா இயக்கிய கடைசித் திரைப்படம் வர்மா திரையரங்குகளுக்கு வரவில்லை. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான இது, ஒரிஜினல் படத்தின் எந்தச் சாயலையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறி, படத்தின் தயாரிப்பாளர்கள் வர்மா படத்தை வெளியிடவில்லை. வேறு இயக்குநரை வைத்து அதே கதையை இயக்கி ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியிட்டனர். பாலா போன்ற சிறந்த இயக்குநருக்கு இப்படி நேர்வது துரதிர்ஷ்டம்.

வர்மாவுக்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளியான படம் நாச்சியார். அது வெளியாகி 4 வருடங்களுக்கு மேலாகிறது. அது பாலாவின் ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட திரைப்படம் அல்ல. அதற்கு முன்பு தாரை தப்பட்டை. பாலா படங்களில் மிக அதிக ஏமாற்றத்தை தந்த படம். அவர் பெயர் சொல்லும் கடைசிப் படமாக அமைந்தது பரதேசி. 2013 இல் வெளியானது.

1999 இல் முதல் படம் சேது தொடங்கி 2009 இல் வெளியான நான் கடவுள் வரையான பாலா படங்கள் குறித்து அறியாத தலைமுறைக்கு அந்தப் படங்கள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறுவது அவசியமாகும்.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய நான்கும் பாலாவின் முக்கியமான திரைப்படங்கள். இந்தப் படங்கள் கதையின் வலிமையால் முன்னகர்கிறவை அல்ல. கதாபாத்திரங்களின் வலிமையே இந்தப் படங்களில் காட்சிகளை நகர்த்தும். கதாபாத்திரங்கள் என்று பன்மையாகச் சொன்னாலும் பிரதானமாக வரும் நாயகன் கதாபாத்திரமே இந்தப் படங்களின் மையம். நமது கற்பனை கடவுளர்களுக்குரிய சுதந்திரமும், வலிமையும் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

நந்தா படத்தின் நாயகன் அறியாத வயதில் தெரியாமல் செய்த கொலைக்காக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவன். இயல்பாக கிடைக்க வேண்டிய தாய்ப்பாசம் மறுக்கப்பட்டவன். பிதாமகன் நாயகன் சித்தனின் தாய் முகம் தெரியாத ஒருவனால் வஞ்சிக்கப்பட்டவள். சுடுகாட்டில் சித்தனை பெற்றெடுத்துவிட்டு அவள் இறந்து போக, சித்தன் சுடுகாட்டிலேயே வளர்கிறான். நான் கடவுளின் நாயகன் பால்யத்தில் தந்தையால் காசியில் அநாதையாக்கப்படுகிறான். சாமியார்கள், மந்திரங்கள், எரியும் பிணங்கள் என அவனது வாழ்க்கை மாறிப் போகிறது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நாயகனின் சித்திரம் பார்வையாளர்கள் மனதில் ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்தும். நாயகன் எதிரிகளின் மீது வன்முறையைச் செலுத்தும்போது, இந்த குற்றவுணர்வே அவனுக்கான நியாயமாக மாறிவிடும். உதாரணமாக பிற இயக்குநர்களின் படங்களில் நாயகனோ, அவனது குடும்பமோ பாதிக்கப்படுகையில் நாயகன் பழிவாங்க புறப்படுவான். ஆனால், பாலாவின் நாயகர்கள் சமூகத்துடன் கலக்க முற்படுகையில் ஏற்படும் முரண்களே அவனது பாதையை தீர்மானிக்கும். தனிமனித கோபமோ, சமூக கோபமோ பாலாவின் நாயகர்களை இயக்குவதில்லை.

இன்னும் எளிமையாகச் சொன்னால், பிற இயக்குநர்களின் படங்களில் வரும் நாயகன் நீதியின்பால் நம்பிக்கை உள்ளவன். அவலங்களை தேடிப்போய் அழிப்பவன். ஆனால், பாலாவின் நாயகர்கள் ரயிலைப் போன்றவர்கள். தங்கள் வழிகளில் எதிர்படுபவைகளை மோதித் தூளாக்கிறவர்கள். அப்படி அவர்கள்; மோதி உடைப்பவை, சமூக சீர்கேடுகள் மீதான பாலாவின் கோபத்தை பிரதிபலிப்பதால், பாலாவின் நாயகர்களும்; நீதிக்காக  போராடும் நாயகர்களின் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

தனது வழியில் இடர்படுபவனவற்றை அழிப்பவன் என்பதால் பாலாவின் நாயகர்கள் பிரச்சனை முடிந்ததும் அதற்கு விளக்கம் அளித்து பக்கம் பக்கமாக பேசுவதில்லை. ஓர் இறகு பிரிந்து செல்வது போல் அவர்கள் அந்தப் பிரச்சனையிலிருந்து விலகிச் செல்வதைப் பார்க்கலாம். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன் என்ற பின்னணி காரணமாக நாயகனின் இந்த செயலை யாரும் தவறாக பார்ப்பதில்லை. பாலாவின் திரைப்படங்களில் அழுத்தமான கதையும், ஒழுகிச் செல்லும் காட்சிகளும் கொண்ட திரைப்படம் சேது. அதிலும், இறுக்கமான நாயகன், சொந்தங்களிடமிருந்து விலகிச் செல்லும் முடிவு போன்ற பாலாவின் ஆதார சுருதிகள் துலங்குவதைப் பார்க்கலாம்.

இந்த நான்குப் படங்களில் வரும் பாலாவின் நாயகிகள் கள்ளமில்லாதவர்கள். வெகுளிகள். தமிழ் கலாச்சார மரபு தூக்கிப் பிடிக்கும் பெண்மைக்குரிய லட்சணங்களை கைவரப்பெற்றவர்கள். சேதுவின் நாயகி வெகுளி. நந்தா நாயகியும் அப்படியே. கஞ்சா விற்கும் நாயகியும்கூட மாணவர்களுக்கு கஞ்சா தர மறுப்பவள். அகோரிக்கே அம்மா பாசத்தை சொல்லிக் கொடுப்பவள் நான் கடவுளின் நாயகி. கடைசியாக வெளிவந்த நாச்சியாரில் நாயகனின்  இடத்தை நாயகி எடுத்துக் கொண்டதால் நாயகனுக்குரிய ஆவேசமும், முரட்டுத்தனமும் கொண்டிருக்கிரிள். இன்னொரு நாயகியோ பாலாவின் ஆரம்பகால நாயகிகளைப் போல அப்பாவி. அவன் இவனிலும் இதனை பார்க்கலாம்.

குடும்ப உறவுகளில் தாய்ப் பாசமே பாலா படங்களில் பிரதானமாக வரும். அந்தப் பாசம் கிடைக்க தடையாக இருப்பதாக தந்தை கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். நந்தாவில் வரும் அப்பா தனது மனைவிக்கு துரோகமிழைப்பவர். அந்த துரோகம்தான் நாயகனின் துயர்மிகு பால்யத்துக்கும், தாய்ப் பாசம் கிடைக்காததற்கும் காரணமாக அமையும். பிதாமகனில் அப்பா கதாபாத்திரம் காட்டப்படவில்லை என்றாலும் அப்பாவின் துரோகமே சித்தன் சுடுகாட்டில் வளர காரணமாக இருக்கும். நான் கடவுளில் அப்பா கதாபாத்திரமே நாயகனை காசியில் தவிக்கவிட்டு, அவனது சாமியார் வாழ்க்கைக்கு காரணமாகிறது.

குடும்ப உறவில் அப்பா எனும் நபர் உருவாக்கும் அபஸ்வரமே நாயகனை இறுக்கமும், இருண்மையும் மிகுந்த ஆளுமையாக உருவாக்குகிறது. சராசரி படங்களில் இதற்கு அடுத்தக்கட்ட நாயகனின் நகர்வு உதாரண குடும்பத்தை கட்டி எழுப்புவதாக இருக்கும். ஆனால், பாலாவின் படங்களில் நாயகன் குடும்ப உறவிலிருந்து விலகிச் செல்கிறவனாக இருப்பதைப் பார்க்கலாம். சேதுவில் நாயகி மரணமடைய, நாயகன் சித்தம் தெளிந்திருந்தும் குடும்பத்துடன் இணையாமல், தனது பழைய பைத்தியக்கார விடுதிக்கு திரும்புகிறான். நந்தாவில் நாயகன் மரணமடைகிறான். பிதாமகனிலும், நான் கடவுளிலும் நாயகன் தனது நாடோடி வாழ்க்கைக்கு திரும்புகிறான். எதிலும் குடும்ப வாழ்க்கை திரள்வதேயில்லை.

பாலா படங்களின் வில்லன்களின் நோக்கம் பணம் பண்ணுவது என்றாலும், சாதாரணப் படங்களில் வரும் வில்லன்களைப் போல படோடபம் கொண்டவர்கள் அல்ல. பிதாமகனின் வில்லன் கஞ்சா விளையும் இடத்தில் சாதாரண தட்டில் கஞ்சி குடிக்கிறான். நான் கடவுளில் வரும் தாண்டவன் பிச்சைக்காரர்களை அடைத்து வைத்திருக்கும் குகையில் அவர்கள் மத்தியில் சாதாரண உணவை சாப்பிடுகிறான். இந்த சித்திரம் வில்லன்கள் எத்தனை இயல்பாக தங்களின் தொழில் இரண்டற கலந்திருக்கிறார்கள் என்று காட்டுவதைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் மரபான கண்ணாடிகளுக்கு பாலா மயங்கிப்போயிருப்பதையும் அவரது படங்களில் காணலாம். வெள்ளந்தி மனிதர்கள் என்றால் அவர்களை பிராமணர்களாக காட்டுவது தமிழ் சினிமாவில் புரையோடிப் போயிருக்கும் கற்பிதம். சேதுவின் நாயகி கதாபாத்திரம் இந்த கற்பிதத்தின் வெளிப்பாடு. அவளது சகோதரி விபச்சார விடுதியில் இருக்கும் போதும் விபச்சாரம் குறித்து அவளுக்கு தெரிவதில்லை. சும்மா பணம் தருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். 'பாட்டப் போடுடா கஞ்சா கொடுக்கி' என்று சொல்லும் பிதாமகன் நாயகியின் வெகுளித்தனத்திலிருந்து, இவர்களின் வெள்ளந்தித்தனம் மாறுபட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாலாவின் குருவும், மறைந்த  இயக்குநருமான பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த பத்து உலக சினிமாக்களில் ஒன்றாக பிதாமகனை குறிப்பிட்டார். பாலா படவிழாவில் கலந்து கொண்ட மணிரத்னம், 'நான் இங்கு விருந்தினராக வரவில்லை, பாலாவின் ரசிகனாக வந்திருக்கிறேன்' என்றார். இவர்கள் குறிப்பிட்ட அந்த பாலா திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. கதாபாத்திரங்கள் மீதான ஆளுமை, காட்சிகளை செதுக்குகிற நேர்த்தி, வசனங்களை குறைத்து நறுக்கென வெளிப்படும் உணர்வுகள் என பலாவின் நேர்மறை அம்சங்கள் பரந்துபட்டவை. பெண்கள் உள்ளிட்டவற்றில் அவர் செலுத்தும் மரபான பார்வைகளை தவிர்த்தால் இந்திய எல்லையை தாண்டிச் செல்லும் வலிமை அவரது படங்களுக்கு உண்டு. சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படத்தில் எப்படியான பாலா வெளிப்படப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director bala