Tamil Names: படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க கருணாநிதி செய்த தரமான சம்பவம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் உருவாக்காத அறிவிப்பு தான் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற கருணாநிதியின் ஆணை.

  • Share this:
விஜய்யின் 65-வது படத்துக்கு பீஸ்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்ததை ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் படத்துக்கு ஆங்கிலத்தில் பெயரா என்று பொருமுகின்றனர். இந்தத் தமிழ் பாசக்கிளிகள் யார் என்றுப் பார்த்தால், நேற்றுவரை விஜய்யை ஜோசப் விஜய் என்று மதத்தோடு அடையாளப்படுத்த மல்லுக்கட்டியவர்கள் தான். இவர்களுக்குப் பிரச்சனை தமிழோ, ஆங்கிலமோ அல்ல, விஜய் தான் அவர்களின் இலக்கு.

2006 ஜூலைக்குப் பிறகு வெளிவந்த தமிழ் படங்களில் ஒன்றுக்குக்கூட ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்படவில்லை. தமிழில் பெயர் வைத்தால் 30 சதவீத கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அறிவிப்பு வந்ததும் ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தவர்கள் தமிழில் பெயர்களை மாற்றினர். சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றிருந்த பெயர் வரி விலக்குக்காக உனக்கும் எனக்கும் என மாறியது. எம்டன் மகன், எம் மகன் ஆனது. இத்தனைக்கும் எம்டன் என்பது ஜெர்மன் கப்பலின் பெயர். இரண்டாம் உலகப் போரில் எம்டன் கப்பல் தமிழகத்தை தாக்கும் என மக்கள் அஞ்சி நடுங்கினர். அதிலிருந்து கோபக்கார நபர்களை எம்டன் என்ற அடைமொழியில் விளிப்பது வழக்கமானது. எம் மகனில் பரத்தின் தந்தையாக வரும் நாசர் அப்படியொரு சிடுமூஞ்சிப் பேர்வழியாக நடித்ததால் எம்டன் மகன் என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். வரி விலக்குக்காக அதை எம் மகன் என சுருக்கினர். அதேபோல் ஜில்லுன்னு ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதலானது.

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளர்ந்திடுமா? அரசுக்கு வர வேண்டிய வரி வீணாவதுதான் மிச்சம் என்றனர் சிலர். ஆனால், கருணாநிதியின் நடவடிக்கையின் பின்னால் இரு காரணங்கள் இருந்தன. திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது, அதனை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று அப்போதைய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதில் நியாயமும் இருந்தது. அவர்கள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதித்தால் படம் பார்க்க வரும் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகமும் நனையக்கூடாது நத்தையை எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் கருணாநிதி அடித்த, ஒரே கல்லில் மூன்று மாங்காய் சாதனைதான் இந்த தமிழ் பெயர் அறிவிப்பு.

அதுவரை டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றால் 30 ரூபாய் வரி போக, 70 ரூபாய் திரையரங்குகளுக்கு கிடைக்கும். வரி விலக்கு அறிவிப்பால் திரையரங்குகள் முழுதாக 100 ரூபாயை பெற்றன. ஏற்கனவே இருந்த அதே கட்டணம் என்பதால் பொதுமக்களுக்கும் பாதிப்பில்லை. இவர்களும் ஹேப்பி, அவர்களும் ஹேப்பி. கூடுதலாக படங்களின் பெயர்கள் தூயத் தமிழில் வைக்கப்படும். அரசுக்கு வந்து கொண்டிருந்த கேளிக்கை வரி மட்டும் ரத்தாகும். லட்சம் கோடியில் பட்ஜெட் போடும் மாநிலத்தில் டிக்கெட் கட்டணத்தில் மூலம் வரும் வரி என்பது மிகமிகச் சொற்பம். அப்படி ஒரே அறிவிப்பில் மூன்று பயன்களை அறுவடை செய்தார் கருணாநிதி.

2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதியின் அனைத்துத் திட்டங்களையும் மாற்றுவதைப் போல தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்பதையும் மாற்றினார். தமிழில் பெயர் வைக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படமாக இருக்க வேண்டும் என கூடுதல் நிபந்தனைகள் விதித்தார். முதலிரண்டு நிபந்தனைகள் ஓகே. தமிழ் கலாச்சாரம் எது என்று யார், எப்படி நிர்ணயிப்பது? இந்த குளறுபடியான நிபந்தனையை வைத்து, தனக்கு பிடிக்காத நபர்களின் படங்களுக்கு வரிச்சலுகையை மறுத்தார் ஜெயலலிதா. மது விடுதியில் திருமணம் செய்வது போன்ற காட்சி அமைந்த 3 படத்துக்கு வரிச்சலுகை கிடைத்தது. அதே நேரம் உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டது. அந்தப் படம் மட்டுமில்லை, அவர் நடித்த எந்தப் படத்துக்கும் வரிச்சலுகை வழங்கப்படவில்லை. அவர் தயாரித்தார் என்பதற்காக சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படமும் இதே பிரச்சனையை எதிர்கொண்டது. அதனை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்று வரிச்சலுகைப் பெற்றது தனிக்கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருணாநிதியின் வரிச்சலுகை அறிவிப்பால் எது நடந்ததோ இல்லையோ படங்கள் அருமையான தமிழ் பெயர்களை தாங்கி வந்தன. மோடி அரசு டிக்கெட் கட்டணத்தை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்த பிறகு இந்த அறிவிப்பு தானாகவே காலாவதியானது. எந்தப் பெயர் என்றாலும் கட்டணத்தைப் பொறுத்து வரி விகிதம் போடப்பட்டு, பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது. எடப்பாடி அரசு, மல்டிபிளக்ஸ்களின் அதிகப்பட்ச கட்டணத்தை 90 ரூபாயிலிருந்து, 165 ரூபாய்வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று அனுமதித்ததுடன், ஜிஎஸ்டி வரி விதிப்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் போன்ற மல்டிபிளக்ஸ் ஓனர்கள் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். 165 ரூபாய் டிக்கெட் கட்டணத்துக்கான வரியையும் மக்களிடமே அவர்கள் வசூலிப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. 90 ரூபாயிலிருந்து 75 ரூபாய் உயர்த்தி 165 ரூபாயானதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. மக்கள் என்னவானால் நமக்கென்ன.

இருக்கிற கட்டணத்திலேயே திரையரங்குகளுக்கு லாபத்தை ஏற்படுத்தி, அதேநேரம் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் உருவாக்காத அறிவிப்பு தான் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற கருணாநிதியின் ஆணை. அதிலிருந்த நுட்பமும், இருதரப்பினர் மீதிருந்த அக்கறையும், தமிழ் சார்ந்த பேணலும் அதன் பிறகு வந்த அரசுகளிடம் காணமுடியவில்லை.

இன்று தமிழ்ப் படங்களுக்கு மாஸ்டர், டாக்டர், எனிமி, பீஸ்ட் என்று சகட்டுமேனிக்கு ஆங்கிலப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஒரு தலைமையின் பத்தாண்டு வெற்றிடம் தெரியத்தான் செய்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: