ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

73 வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் ரஜினி 46 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கடந்துள்ளார். 45 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நீடித்து இன்னமும் நாயகனாக நடிக்கும் நடிகன் என்ற பெருமை உலகிலேயே ரஜினிகாந்த்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இப்படி உலகின் தன்னிகரில்லா நடிகனாக விளங்கும் ரஜினிகாந்தின் சாதனைகளையும் திரைப்பயணத்தையும் இந்தத் தொகுப்பில் திரும்பி பார்க்கலாம்.

வசீகரம் என்ற சொல்லிற்கு வாழும் எடுத்துக்காட்டு நடிகர் ரஜினிகாந்த். நான்கு தசாப்தங்களை தாண்டி ஒரு நடிகரால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைக்க முடியும் என்றால் அதனை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தியது ரஜினிகாந்தின் அபாரமான ஸ்டைல். சிவாஜி ராவாக பெங்களூரில் பஸ் கண்டக்டராக 134ம் நம்பர் பஸ்ஸில் பணியாற்றியபோதே ரஜினிகாந்தின் ஸ்டைல் பெங்களூரு முழுவதும் பிரபலம். பகட்டாக உடை அணிந்து கூட்டநெரிசலில் ரஜினி ஸ்டைலாக டிக்கெட் கிழிக்கும் காட்சியை காணவே கல்லூரி பெண்கள் ரஜினியின் பஸ்ஸில் விரும்பி ஏறுவார்கள் என ரஜினியே மேடைகளில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  பாட்டு வரி காணோம்.. முக்கிய சீன் இல்லை.. ரீ ரிலீஸ் ஆன பாபா படத்தில் இவ்வளவு மாற்றங்களா?

பேருந்தில் நடத்துனராக பணியாற்றினாலும் நடிகனாக வேண்டும் என்று தீராத வேட்கையில் சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி ரஜினிகாந்த், பிரபல இயக்குனர் கே பாலசந்தர் மோதிரக்கையால் குட்டப்பட்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது.

முதல் படத்திலேயே ஒரு நடிகரை மூன்று திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்வது அந்நாளில் சாத்தியமில்லாத ஒன்று ஆனால் ரஜினியின் வசீகரத்தை உணர்ந்த கே பாலசந்தர் ரஜினியை மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு என ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் சிகரெட்டை தூக்கிப்போட்டு ரஜினிகாந்த் பிடித்த ஸ்டைல் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எனினும் பின்னாளில் புகைபிடிக்க வேண்டாம் என ரசிகர்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் வளர்ந்த ரஜினிகாந்திற்கு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான "புவனா ஒரு கேள்விக்குறி" நற்பெயரை பெற்றுத் தந்தது. சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளம் ரஜினிகாந்திற்கு இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்க தமிழின் படு பிசியான நடிகராக மாறிய ரஜினிகாந்த் 1978ஆம் ஆண்டில் மட்டும் 20 திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கலைஞானம் தயாரிப்பில் ரஜினிகாந்த் பைரவி திரைப்படத்தில் நாயகனாக களமிறங்க அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது.

பைரவி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கலைப்புலி தாணு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என தலைப்பிட்டு திரைப்படத்தை விளம்பரம் செய்தார். பின்னாட்களில் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் புதிய மைல்கல்லாக உருவானது. ஒரு கட்டம் வரை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்து வந்த நிலையில் இனி தனித்தனியாக திரைப்படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்தனர். முள்ளும் மலரும், ஜானி போன்ற தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் ஒருகட்டத்தில் முழுக்க வணிக ரீதியிலான கமர்சியல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பாலிவுட்டிலும் புகுந்து பட்டையைக் கிளப்பினார். ஹாலிவுட்டிலும் பிள்ட்ஸ்டோன் மூலம் தடம் பதித்தார். 1990ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் படையப்பா போன்ற திரைப்படங்கள் வசூலை அள்ள ரஜினிகாந்தின் வர்த்தக எல்லைகள் எகிறின. டான்சிங் மகாராஜ் என்ற பெயரில் ஜப்பானில் வெளியான முத்து திரைப்படம் மாபெரும் வெற்றிபெற அங்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது.

தமிழ் சினிமாவின் முதல் நூறு கோடி, 200 கோடி வசூல் திரைப்படங்கள் என ரஜினியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். தமிழ் சினிமாவில் வேறெந்த நடிகராலும் இனி தொட முடியாத பல உச்சங்களை தொட்டுள்ள ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் தன்னிகர் இல்லா அடையாளம்.

First published:

Tags: Cinema 18, Rajinikanth, Tamil Cinema, Tamil cinema celebrities wishes