ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எங்க வீட்டுப் பிள்ளை முதல் இன்று போல் என்றும் வாழ்க வரை... சென்னையில் சாதனை புரிந்த எம்ஜிஆர் படங்கள்!

எங்க வீட்டுப் பிள்ளை முதல் இன்று போல் என்றும் வாழ்க வரை... சென்னையில் சாதனை புரிந்த எம்ஜிஆர் படங்கள்!

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

1977 வரை எம்ஜி ராமச்சந்திரனின் படங்களைத் தவிர எந்த நடிகரின் படங்களும் சென்னையில் 13 லட்சங்களை கடந்து வசூலித்ததில்லை என்கிறார்கள். சிவாஜி ரசிகர்கள்தான் இதற்கு பதில் கூறவேண்டும்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜி ராமச்சந்திரன் மறைந்து இன்று 35 வருடங்களாகிறது. திரையிலும், அரசியலிலும் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தவர் எம்ஜி ராமச்சந்திரன் அளவுக்கு வேறு யாரும் இல்லை. மக்களின் நாடி அறிந்து அதற்கேற்ப தனது இமேஜை வளர்த்துக் கொண்டவர். திரைப்படம் மூலம் மக்களிடையே ஒருவர் உருவாக்கும் பிம்பம் எத்தகைய வலிமையானது என்பதற்கு எம்ஜி ராமச்சந்திரன் சிறந்த உதாரணம்.

சினிமா தமிழில் பேசத் தொடங்கிய காலம்தொட்டு சென்னை சிட்டி வசூல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வந்துள்ளது. சில படங்களின் 20 முதல் 30 சதவீத வசூல் சென்னை சிட்டியிலிருந்து கிடைத்ததாக இருக்கும். குறிப்பாக நகரத்தை மையப்படுத்திய படங்கள். இன்று ரஜினி, விஜய் இருவரது படங்களும் சென்னை சிட்டி கலெக்ஷனில் முன்னணியில் உள்ளன. பாகுபலி 2, கேஜிஎஃப் சேப்டர் 2, விக்ரம் போன்றவை விஜய்யின் சர்காரை பின்னுக்குத் தள்ளின. எனினும், சென்னையில் 10 கோடிகளை சாதாரணமாக தாண்டுவது ரஜினி, விஜய் படங்களே. இவர்களுக்கு அடுத்த இடத்தில் அஜித் வருகிறார்.

1936 சதிலீலாதவதி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான எம்ஜிஆர் 1978 இல் வெளியான மதுரையை மீட்ட சுநதர பாண்டியன்வரை 136 திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த காட்சிகளை வைத்து, அவரது மறைவிற்குப் பிறகு 1990 இல் அவசர போலீஸ் 100, நல்லதை நாடு கேட்கும் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த 136 திரைப்படங்களில் சுமாராக 114 திரைப்படங்களில் எம்ஜிஆர் நாயகனாக நடித்தார்.

எம்ஜிஆருக்கு ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களே கிடைத்தன. 1947 இல் வெளியான ராஜகுமாரியில் அவர் முதன்முதலாக நாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து பைத்தியக்காரன், அபிமன்யூ, ராஜமுக்தி, மோகினி படங்களில் நாயகன் வேடம் அமைந்தது. அதையடுத்து வெளியான ரத்னகுமாரில் பி.யூ.சின்னப்பா நாயகனாக நடித்தார். இரண்டாவது நாயகனாக எம்ஜி ராமச்சந்திரன் வருவார். ஐம்பதுகளின் தொடக்கத்திலிருந்து எம்ஜி ராமச்சந்திரனின் அலை வீசத் தொடங்கியது. 1958 இல் வெளியான நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது படங்கள் தனிக்கவனம் பெற ஆரம்பித்தன.

சென்னை மாநகரில் அவரது 8 திரைப்படங்கள் 13 லட்சங்களை கடந்து வசூலித்துள்ளன. இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது. அநதப் படங்கள்...

1. எங்க வீட்டுப் பிள்ளை (1965): 1964 இல் தெலுங்கில் வெளியான ராமுடு பீமுடு படத்தை தமிழில் எங்க வீட்டுப் பிள்ளையாக எடுத்தனர். எம்ஜி ராமச்சந்திரன் இரு வேடங்களில் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் இதன் வசூல் 13.23 லட்சங்கள்.

2. அடிமைப் பெண் (1969): கே.சங்கர் இயக்கத்தில் எம்ஜி ராமச்சந்திரன், ஜெயலலிதா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்த அடிமைப்பெண் மாபெரும் வெற்றிப் படைப்பானது. இதன் சென்னை வசூல் 13.60 லட்சங்கள்.

3. மாட்டுக்கார வேலன் (1970): 1966 கன்னடத்தில் வெளியான எம்மி தம்மன்னா படத்தை தமிழில் மாட்டுக்கார வேலனாக எடுத்தனர். படம் இங்கு நல்ல வெற்றியை பெற்றது. இதிலும் ஜெயலலிதாதான் நாயகி. சென்னையில் இந்தப் படத்தின் வசூல் 13.21 லட்சங்கள்.

4. ரிக்ஷாக்காரன் (1971): எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ரிக்ஷாக்காரன் எம்ஜி ராமச்சந்திரனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் சென்னை வசூல் 16.84 லட்சங்கள்.

5. உலகம் சுற்றும் வாலிபன் (1973): எம்ஜி ராமச்சந்திரன் இயக்கி, நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அவரது மைல் கல் திரைப்படங்களுள் ஒன்று. இந்தப் படத்தின் சென்னை வசூல் 23.40 லட்சங்கள்.

6. இதயக்கனி (1975): திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய பின் தனது கட்சியை பிரபலப்படுத்த எம்ஜி ராமச்சந்திரன் நடித்தப் படங்களுள் ஒன்று இதயக்கனி. இதன் சென்னை வசூல் 19.89 லட்சங்கள்.

7. மீனவ நண்பன் (1977): ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜி ராமச்சந்திரன், லதா நடித்த மீனவ நண்பன் அவரது இன்னொரு வெற்றிப் படம். மீனவ நண்பன் என படம் நடித்த அவர் ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது நகைமுரண். மீனவ நண்பனின் சென்னை வசூல் 17.70 லட்சங்கள்

8. இன்று போல் என்றும் வாழ்க (1977): எம்ஜி ராமச்சந்திரனின் மற்றுமொரு அதிமுக பிரச்சாரப் படம். அடிமைப் பெண்ணை இயக்கிய கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் சென்னை வசூல் 15.68 லட்சங்கள்.

1977 வரை எம்ஜி ராமச்சந்திரனின் படங்களைத் தவிர எந்த நடிகரின் படங்களும் சென்னையில் 13 லட்சங்களை கடந்து வசூலித்ததில்லை என்கிறார்கள். சிவாஜி ரசிகர்கள்தான் இதற்கு பதில் கூறவேண்டும்.

First published:

Tags: MGR