Home /News /entertainment /

காற்றில் மென்குரலை பரப்பிய கார்குழல் பாடகி ஸ்வர்ணலதா!

காற்றில் மென்குரலை பரப்பிய கார்குழல் பாடகி ஸ்வர்ணலதா!

ஸ்வர்ணலதா

ஸ்வர்ணலதா

ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பிறகு ஸ்வர்ணலதாவின் வெற்றியின் வீச்சு பல மடங்கு உயர்ந்தது.

  • News18
  • Last Updated :
    காற்றின் தீரா பக்கங்களில் தன் மென்குரலை பரப்பிய கார்குழல் பாடகி ஸ்வர்ணலதா.

    "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தில் ஒலித்த மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் இந்த பாட்டு பறவையின் முதல் பாடலானது. "மாசிமாசம் ஆளான பொண்ணு" என காதல் ஆலாபனை பாடிய இவரது குரல் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்தது.

    இளையராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடிய "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" மற்றும் ’மாலையில் யாரோ மனதோடு பேச..மார்கழி வாடை மெதுவாக வீச’.. பாடல் இசை ரசிகர்களின் தனிமை இனிமை படாலானது. தனிமையில் இருக்கும் பெண்ணின் காதலை ஒரு ஏகாந்தமாக ஓவியம் தீட்டி தூக்கம் வராத பொழுதுகளில் ஒரு தாலாட்டாக மாறியது ஸ்வர்ணலதாவின் இப்பாடல்.

    ’சின்னத்தம்பி’, ’இது நம்ம பூமி’, ’பாண்டித்துரை’ ஆகிய திரைப்படங்களின் இவர் பாடிய பாடல்கள் அப்படியே குஷ்புவிற்கு பொருந்தி போனது. ‘சின்னதம்பி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போவோமா ஊர்கோலம்... பூலோகம் எங்கெங்கும்... ’ பாடல் அப்போது பட்டி தொட்டியெங்கும் ஒலித்து தமிழ் இசை ரசிகர்களுக்கு காணும் நேரம் ஆனந்தத்தையும், காலம் யாவும் பேரின்பத்தையும் அளித்தது.

    ‘வள்ளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" பாடலில் ஸ்வர்ணலதாவின் குரல் காதலின் உச்சத் தருணத்தை அது தரும் உன்னத உணர்வை வெளிப்படுத்தி அவர் குரல் செய்த ஜாலங்கள் ஆயிரம் என்றானது.

    Also read... இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!

    ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பிறகு ஸ்வர்ணலதாவின் வெற்றியின் வீச்சு பல மடங்கு உயர்ந்தது. முக்காலா முக்காபுலா, அக்கடான்னு நாங்க எடை போட்டா, குச்சி குச்சி ராக்கம்மா, மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே, உளுந்து விதைக்கையிலே, ஒரு பொய்யாவது சொல் கண்ணே, எவனோ ஒருவன் வாசிக்கிறான், பூங்காற்றிலே பாடல்கள் மாஸ் ஹிட் அடித்து இசை ரசிகர்களின் இதயத்தில் ரிபிட் மோடில் கேட்கப்பட்டது.

    ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ’கருத்தம்மா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா பாடிய போறாளே பொன்னுத்தாயி பாடல் அவரின் உச்சம் என சொல்லலாம். ஆம் ஸ்வர்ணலதாவின் சோகம் பிழியும் குரல்... நெஞ்சை கரைய வைத்து இதயத்தை கணக்க வைத்திருக்கும். இந்த பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் வென்ற ஸ்வர்ணலதாவை இதயத்தை இசைத்து உயிரை நனைத்த பாடகி என தாராளமாக சொல்லலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி