இன்று 67வது தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் யார் யாருக்கு எல்லாம் விருது வழங்கப்படும் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம்.
67வது தேசிய விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக வழங்கப்பட உள்ளது.
சிறந்த படம் - 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள மரைக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கோவிட் நோய் தொற்று காரணமாக ரிலீசாகாமல் உள்ளது
சிறந்த தமிழ் படம் - சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் - அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. போன்ஸ்லே திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடிகை - தமிழில் தாம்தூம் மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்களில் நடித்த கங்கணா ரனாவத் சிறந்த நடிகைக்கான விருதினை பங்கா மற்றும் ஜான்சி ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பெற உள்ளார்.
சிறந்த துணை நடிகர் - நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதினை பெற உள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.
சிறந்த குழந்தை நட்சத்திரம் - கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்ததற்காக நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற உள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர் - அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திற்காக இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற உள்ளார்.
ஜூரி சிறப்பு விருது - பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு தேர்வுக்குழு விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டி தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
இதே விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது கலைச்சேவையை பாராட்டி தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தற்போது டெல்லி சென்றடைந்துள்ளனர்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.