CINEMA 67TH NATIONAL FILM AWARDS BEST FILM ASURAN DHANUSH OTHA SERUPPU SIZE 7 PARTHIBAN WON NATIONAL AWARD SCS
National Award: தேசிய விருதை வென்ற ’அசுரன்’ தனுஷ், ’ஒத்த செருப்பு’ பார்த்திபன்!
தனுஷ் - பார்த்திபன்
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம், சிறப்பு தேசிய விருது (jury award) மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகளை வென்றது.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் இந்திய தலைநகர், புது டெல்லியில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த விழாவில் 2019-ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதுகள் ஆரம்பத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி தாமதமானது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வரும், திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விருதுகளை வழங்குகின்றது. தேசிய விருதுக்கு 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் அசுரன் திரைப்படம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுதியிருந்த ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம், சிறப்பு தேசிய விருது (jury award) மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகளை வென்றது.
விஸ்வாசம் படத்தில் இசையமைத்த டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாப்பாத்திரத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கியிருந்தார்.
கே.டி.கருப்புதுரை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது நாக விஷாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் மதுமிதா இயக்கியிருந்தார்.