ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்திலும் அவருடன் ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு விருது கிடைக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 67-வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்க பதிவில், சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜவுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
67-வது தேசிய விருது விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு நடுவர்களின் சிறப்பு விருது மற்றும் சிறந்த ஒலிப்பதிவுக்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அதேபோல் அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் இசைக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.இமான், “இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்காக நாங்கள் எதுவும் மெனக்கெடவில்லை. எந்த விருதும் கலைஞனுக்கு ஒரு ஊக்கம் தான்.” என்றார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.