Home /News /entertainment /

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்..' வேதாவின் 66 வருட இசைபயணம்

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்..' வேதாவின் 66 வருட இசைபயணம்

வேதாவின் 66 வருட இசைபயணம்

வேதாவின் 66 வருட இசைபயணம்

ஆலமரத்தடியில் வேறு மரம், செடிகள் வளராது என்பார்கள். கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் என்ற இருபெரும் ஆலமரத்தடியில் வேறு யார் முளைத்தாலும் வேர்விட்டு, கிளைபரப்பி பிறர் கவனம் பெறுவது கடினம்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என இருபெரும் இசை மேதைகள் கோலோச்சிய காலத்தில் தமிழில் அறிமுகமாகி தனித்துவமான பாடல்களால் தனக்கென இசையுலகில் ஓர் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் வேதா (எஸ்.எஸ்.வேதாசலம்).
ஆலமரத்தடியில் வேறு மரம், செடிகள் வளராது என்பார்கள். கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் என்ற இருபெரும் ஆலமரத்தடியில் வேறு யார் முளைத்தாலும் வேர்விட்டு, கிளைபரப்பி பிறர் கவனம் பெறுவது கடினம்.

வேதா ஓரளவு அதனை சாதித்தார். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் வேதா பணிபுரிந்தார். சிங்கள இயக்குநர் ஜெயமனேயின் திரைப்படத்துக்கு 1952 இல் இசையமைத்தார். அதன் பிறகு 1953, 1954 வருடங்களிலும் ஜெயமனேயின் படங்களுக்கு இசையமைத்தார். 1955 இல் வெளியான மேனகா படத்துக்கு டி.ஜி.லிங்கப்பா, சி.என்.பாண்டுரங்கன், வேதா என மூவர் இணைந்து இசையமைத்தனர். அதன் பிறகு 1956 இல் பழம்பெரும் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய மர்ம வீரன் படத்துக்கு வேதா இசையமைத்தார். அவர் தனியாக இசையமைத்த முதல் தமிழ்ப் படம் இது.மர்ம வீரன் படத்தில் ஸ்ரீராம் நாயகனாக நடிக்க, வைஜெயந்திமாலா நாயகியாக நடித்தார். ஸ்ரீராமுக்காக அன்றைய முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்காராவ், நாகேஸ்வரராவ் ஆகியோர் மர்ம வீரனில் கௌரவ வேடத்தில் நடித்தனர்.; அப்படி முதல் படமே ஐந்து சூப்பர் ஸ்டார்கள் நடித்தப் படமாக வேதாவுக்கு அமைந்தது.
மர்ம வீரனில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, துடிக்கும் வாலிபமே... பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலசரஸ்வதி தேவி இந்தப் பாடலை பாடியிருந்தார். இந்தப் படத்துக்காக மருதகாசி, தஞ்சை என்.ராமையா தாஸ் ஆகியோர் எழுதிய பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வேதாவுக்கு தனித்த அடையாளத்தை தந்தது.

Also Read : தோல்விகளால் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக மாறிய வெற்றிப்பட இயக்குநர்

1958 இல் வேதா இசையில் அன்பு எங்கே, மணமாலை ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் அன்பு எங்கே படத்தில் சீதாராமன் எழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு டிங்கிரி டிங்காலே... பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படம் வெற்றி பெற வேதாவின் இசையும், பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. மணமாலை படத்தில் ஜெமினியும், சாவித்ரியும் பாடும், நடக்காது ஜம்பம் பலிக்காது என்னை தொடவே உம்மாலே முடியாது... பாடல் இன்னொரு வெற்றிப் பாடலாக அமைந்தது. அன்று சிலோன் ரேடியாவில் தொடர்ந்து ஒலிக்கும் பாடலாக இது இருந்தது.1959 இல் மின்னல் வீரன், 1960 இல் பார்த்திபன் கனவு படங்களுக்கு வேதா இசையமைத்தார். இந்தப் படங்களின் வெற்றிக்கு வேதாவின் இசை துணைபுரிந்தது. இதில் இடம்பெற்ற, இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்.. பாடல் அன்றைய ஹிட் பாடலாக அமைந்தது. 1963 இல் கொஞ்சும் குமரி, பெண் மனம் படங்களுக்கும், 1964 இல் பாசமும் நேசமும், சித்திராங்கி, வீராங்கனை, அம்மா எங்கே படங்களுக்கும் இசையமைத்தார். வீரங்கனையில் ஜேசுதாஸுக்கு மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பை வேதா அளித்தார். அதில் சுசீலாவுடன் பாடிய, ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே மற்றும் தத்துவப் பாடலான, இடி இடிக்குது காற்றடிக்குது.. பாடல்கள் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டன.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் வேதா தொடர்ச்சியாக பணிபுரிந்தார். பல வெற்றிப் பாடல்களை தந்திருந்தாலும் வேதா என்றதும் ரசிகர்களுக்கு நினைவுவரும் படம் ஜெமினி கணேசன், அசோகன் நடித்த வல்லவனுக்கு வல்லவன் (1965). இதில் வேதா இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாயின. இதில் இடம்பெற்ற, மனம் என்னும் மேடை மேலே.., ஓராயிரம் பார்வையிலே... பாடல்களின் மெட்டை இந்திப் படத்திலிருந்து வேதா பயன்படுத்தியிருந்தார். எனினும், இதில் இடம்பெற்ற பிற பாடல்களான, பாரடி கண்ணே பொன் முகம்..., அச்சமெங்கே நாணமெங்கே அன்றிருந்த பெண்களெங்கே..., கண்டாலும் கண்டேனே உன் போலே... ஆகிய பாடல்களை வேதா சொந்தமாக ட்யூன் அமைத்து இசையமைத்திருந்தார். அவையும் நல்ல வரவேற்பை பெற்றன.

Also Read : விஸ்வரூபத்தில் ரஜினியை ஹீரோவாக போட வேண்டாம் - தடுத்த தயாரிப்பாளர்

1966 இல் இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், யார் நீ படங்கள் வேதா இசையில் வெளிவந்து வெற்றி பெற்றன. இரு வல்லவர்களில் இடம்பெற்ற, நான் மலரோடு தனியாக... பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடலாக உள்ளது. 1967 இல் எதிரிகள் ஜாக்கிரதை, அதே கண்கள், காதலித்தால் போதுமா படங்களுக்கு வேதா இசையமைத்தார். 1969 இல் மனசாட்சி படத்தில் நாகேஷுக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய நகைச்சுவைப் பாடலான, லவ் பண்ணுங்க சார் நான் வேணாங்கலை அது லைஃப் பிரச்சனை சார் விளையாட்டில்ல... முற்றிலும் வித்தியாசமான கேலப் பாடலாக அமைந்தது.நாகேஷ் பிரதான வேடத்தில் நடித்த, உலகம் இவ்வளவுதான் படத்துக்கும் வேதாதான் இசை. இதில் சோவுக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய, ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு, இந்த உலகம் சுழலுதுதடி பல ரவுண்டு... பாடல் இன்னொரு வித்தியாசமான தத்துவப் பாடல். 1970 இல் சிஐடி சங்கர் படத்துக்கும், 1971 இல் ஜஸ்டிஸ் விஸ்வநாதன் படத்துக்கும் வேதா இசையமைத்தார். மெல்லிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை, பைலா பாணியிலான பாடல்கள் என பல்வேறு இசை வடிவங்களில் பாடல்களை தந்த வேதாவுக்கு தொடர்ச்சியாக பாடங்கள் அமையாதது துரதிர்ஷ்டம்.

வேதா இசையமைத்த காலத்தால் அழியாத சில பாடல்கள்...
பளிங்கினால் ஒரு மாளிகை.... (வல்லவன் ஒருவன்)
ஓராயிரம் பார்வையிலே... (வல்லவனுக்கு வல்லவன்)
செவ்வானத்தில் ஒரு... (நான்கு கில்லாடிகள்)
நான் மலரோடு தனியாக... (இரு வல்லவர்கள்)
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்... (வல்லவன் ஒருவன்)
பிருந்தாவனத்தில் பூ எடுத்து... (சிஐடி சங்கர்)
மனம் எனும் மேடை மேலே... (வல்லவனுக்கு வல்லவன்)
நீரோடு செல்கின்ற ஓடம்... (ஜஸ்டிஸ் விஸ்வநாத்)

வேதா தமிழில் முதல்முதலாக இசையமைத்த மர்ம வீரன் 66 வருடங்களுக்கு முன் 1956 ஆகஸ்ட் 3 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. தமிழில் வேதா இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று 66 வருடங்கள் நிறைவடைகிறது.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி