5ஜி தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால் பறவைகளும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும் என வழக்கு தொடுத்த நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு நீதிமன்றம் 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது இரண்டு லட்சமாக குறைத்து தீர்ப்பளித்திருக்கிறது.
நடிகை ஜூகி சாவ்லா இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர். இப்போதும் அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் சமூக சேவை, சுற்றுச்சூழல் என திரைப்படத்துக்கு வெளியேயும் இயங்கிக் கொண்டிருப்பவர். 5ஜி தொழில்நுட்பம் வந்தால் அதன் மின் காந்த அலைகள் காரணமாக பறவைகளும் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும். அதனால் 5ஜி திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, இது முற்றிலும் தவறான தகவல். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி, ஜுஹி சாவ்லாவுக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த 5ஜி தொழில்நுட்பம் சாதாரண விஷயமல்ல, மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி, ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபாய் அபராதத் தொகையை இரண்டு லட்சமாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பை வரவேற்று இருக்கும் ஜூஹி சாவ்லா, தன்னுடைய சமூக பங்களிப்பையும், சேவைகளையும் முந்தைய விசாரணையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 2010 முதல் மின்காந்த அலைகள் குறித்து நான் முறையாக படித்து வருகிறேன். அதனை ஒட்டியே இந்த வழக்கை தொடுத்திருந்தேன். இதற்கு முதலில் தீர்ப்பு வந்த போதே மேல்முறையீடு செய்யும்படி என்னுடைய குடும்பத்தினர் கூறியிருந்தனர். இப்போது நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகைகளுக்கு மிக்க நன்றி என அவர் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.