களத்தூர் கண்ணம்மாவில் நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துவிட்டு, பதின்பருவத்தில் நடன இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறத்தி மகன் படத்தில் சின்ன வேடம் ஒன்றில் தோன்றினார். பிறகு சிறுசிறு வேடங்களில் தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்தார். 1974 இல் கன்னியாகுமரி மலையாளப் படத்தில் நாயகனானார். ஆமாம், கமலை முதன்முதலில் நாயகனாக்கியது மலையாள சினிமாதான்.
கமல் நாயகனாக நடித்த முதல் தமிழ்ப் படம்...?பட்டாம்பூச்சி.. இந்தத் தமிழ்ப் படத்தில்தான்; கமல் முதன்முறை நாயகனாக நடித்தார். பட்டாம்பூச்சி படத்திற்கு முன் ஆர்.சி.சக்தி தனது உணர்ச்சிகள் படத்தில் கமலை நாயகனாக்கினார். படம் வெளியாக தாமதமாக, பட்டாம்பூச்சி முந்திக் கொண்டு 1975, பிப்ரவரியில் வெளியாகி, கமல் நாயகனாக நடித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெயரை தட்டிச் சென்றது.
பட்டாம்பூச்சி படத்தில் நாயகியாக நடித்தவர் ஜெயசித்ரா. இவர் கமல் பிரசாத் மாஸ்டரின் நடனக் குழுவில் இருந்த போது அந்தக் குழுவில் டான்சராக இருந்தவர். பல படங்களில் கமலைப் போல் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக குறத்தி மகன் படத்தில் கமலுடன் நடித்தார். அதில் கமலைவிட ஜெயசித்ராவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் தரப்பட்டிருந்தது. பட்டாம்பூச்சியில்தான் அவரும் தனி நாயகியாக அறிமுகமானார். கமலை காதல் இளவரசன் என்றும், ஜெயித்ராவை காதல் இளவரசி என்றும் அடைமொழி தந்து டைட்டிலில் அறிமுகப்படுத்தியிருந்தனர். கமல் நாயகன் படத்திலிருந்து தனது பாதையை வேறு திசையில் மாற்றிக் கொள்வதுவரை, காதல் இளவரன் என்ற பட்டத்துடன்தான் அறியப்பட்டார்.
பட்டாம்பூச்சியை பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதி, இயக்கினார். பி.சீனிவாசனின் ஸ்ரீ பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்தது. நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, செந்தாமரை, 'பக்கோடா' காதர், பி.ஆர்.வரலட்சுமி, சண்முகசுந்தரம் உள்பட பல சீனியர் நடிகர்கள் பட்டாம்பூச்சியில் நடித்தனர். பி.சீனிவாசனே படத்துக்கு இசையமைத்தார். கண்ணதாசனும், புலமைப்பித்தனும் பாடல்கள் எழுதினர்.
இதில் ஒரு பாடலை நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மொட்டை மாடியில் எடுத்தனர். கமல், ஜெயசித்ரா இடம்பெறும் பாடல் அது. இருவரின் காம்பினேஷன் காட்சிகள் முடிந்த பின், கமல் ஷோலோவாக ஆடும் காட்சி எடுக்கப்பட்டது. ஹோட்டல் மொட்டை மாடியில் சிறிய மேடை அமைத்து, அதன் நடுவே ஒரு கம்பம் வைத்திருந்தனர். கமல் ஓடி வந்து அந்த கம்பத்தைப் பற்றி, ஒரு ரவுண்ட் சுழன்று வர வேண்டும். ஆக்ஷன் சொன்னதும் கமல் மேடையில் தாவி ஏறி, கம்பத்தை பிடித்ததுதான் தாமதம், கம்பம் சரிந்தது. நல்லவேளையாக மொட்டை மாடிக்கு வெளியே விழாமல் உட்புறமாக விழுந்ததால் கமல் தப்பித்தார். எதிர்பாராத இந்த விபத்தால் ஜெயசித்ரா உள்பட அனைவரும் கதிகலங்கிப் போயினர். இந்த சம்பவத்தை ஜெயசித்ராவே பேட்டியொன்றில் உணர்ச்சிபாவத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
பட்டாம்பூச்சியில் ரோட்டோர டிபன் கடை நடத்துகிறவர் ஜெயசித்ரா. அவரது தந்தை வி.கே.ராமசாமி. ஹோட்டலுக்கு எதிரிலேயே அவருக்கு பெட்டிக் கடை. ஜெயசித்ராவின் ஹோட்டலுக்கு சாப்பிட கமல் வருகையில் கை கழுவுவதற்காக நீண்ட வரிசை நின்று கொண்டிருக்கும். கமலிடம் ஜெயசித்ரா, "சார் யாரு?" என்று கேட்க, கமல், "ஹீரோ" என்பார்.
"எந்தப் படத்துல?"
"இனிமே எடுக்கப்போற படத்துல..."
"அடடே... வருங்கால நட்சத்திரம்...."
கமலின் அறிமுகக் காட்சியிலேயே அவர் ஹீரோவாக நடிக்கிற முதல் படம் இது என்பதை குறிப்பிட்டு வசனம் வைத்திருந்தனர்.
பட்டாம்பூச்சியில் கமல் ஹீரோவான அதே வருடம், ரஜினி அறிமுகமான பாலசந்தரின் அபூர்வராகங்கள் வெளியானது. கமலை முதன்முறை நாயகனாக ஒப்பந்தம் செய்த ஆர்.சி.சக்தியின் உணர்ச்சிகள் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி 1976 ஆம் ஆண்டே திரைக்கு வந்தது.
1975, பிப்ரவரி 21 இதே நாளில் வெளியான பட்டாம்பூச்சி இன்று 48 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema