சினிமாவில் த்ரில்லருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நொடிக்கு நொடி பரபரப்பில் வைத்திருக்கும் த்ரில்லர் வகை படங்கள் திரைக்கதைதான் மிக முக்கியம். சரியான திரைக்கதை என்றால் ஒரே ரூமுக்குள்கூட ஒரு படத்தை எடுத்து முடித்துவிட முடியும். பேய், அமானுஷ்யங்கள் என த்ரில்லர் வகை தொடங்கப்பட்டாலும் ரசிகர்களை ஆர்வத்திலேயே வைத்திருக்க அமானுஷ்யம் ஒன்றுதான் வழியா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. ஹாலிவுட், கொரியன் என பல மொழிகளில் அமானுஷ்யம் தாண்டி மனிதர்களை வைத்தே அலற விட்டு இருப்பார்கள்.
ஏன் தமிழில் வெளியான நூறாவது நாள் கொடுக்காத ஷாக்கா? மொட்டை சத்யராஜ் வரும்போதெல்லாம் மனதுக்குள் ஒருவித பயம் கிளம்புமே , இதுவும்தான் த்ரில்லர். இதேபோல் தமிழில் பல படங்கள் உண்டு. அந்த வரிசையில் சத்தமில்லாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பட்டையைக் கிளப்பிய திரைப்படம் ராட்சசன். முண்டாசுப்பட்டி என்ற அழகான காமெடி படத்தைக் கொடுத்த இயக்குநர் ராம்குமார் காத்திருந்து கொடுத்த பக்கா த்ரில்லர் படம்தான் ராட்சசன். பள்ளி சிறுமி கடத்தப்படுவதும், சிறுமியை போலீஸ் ஹீரோ தேடிப்பிடிப்பதுதான் கதை என்றாலும் நொடிக்கு நொடி பரபர சுவாரஸ்யத்துடன் கொடுத்திருப்பார் இயக்குநர். நமக்கு திகில் கொடுத்த ராட்சசன் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த திகில் மறையவில்லை.
#4YearsOfRatsasan - One Of The Best Psychological Thrillers Ever Made 🔥
That BGM was Next Level 💯#Ratsasan pic.twitter.com/5xCejZkk6c
— Bhushan Khiladi (@Bhushanadhau1) October 5, 2022
அடுத்து என்ன? அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பே படத்தின் மிகப்பெரிய வெற்றி. கடத்தல் வண்டி, கிப்ட் பார்சல் என ராட்சசன் தனக்கென தனி அடையாளத்தையே வைத்திருக்கிறது. சிறுமிகளை கடத்தும் நபருக்கு ஒரு ப்ளாஷ்பேக், அதில் இருக்கும் ஒரு சிறிய நியாயம், இவர்தானா கடத்தல்காரர் எனும்போது இயக்குநர் வைக்கும் ட்விஸ்ட் என ராட்சசன் எப்போது பார்த்தாலும் பயம் கொடுக்கும் திரைப்படம். சீட் நுனி த்ரில்லர் வகை என்றாலும் ரத்தம், கத்தி என எதையுமே அதிகம் காட்டாமல் பயத்தை காட்சியிலும், இசை மூலமாகவும் ரசிகர்களுக்கு கடத்தி இருப்பார்கள். அந்த வகையில் ஜிப்ரான் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார். மெல்ல வருடும் கீபோர் இசையை திகிலாக கொடுத்திருப்பார் ஜிப்ரான். அந்த ராட்சசன் தீம் இசைக்கு இன்றும் ஒரு ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
One of the scariest BGM ever! 🎁#Ratsasan #4YearsOfRatsasan #VishnuVishal pic.twitter.com/riDnFF2GjD
— தமிழ் தளபதி 🇮🇳 (@Tamilse10489195) October 5, 2022
விஷ்ணுவிஷால், அமலாபால், காளிவெங்கட் , முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். குறிப்பாக ராட்சசன் வில்லனாக நடித்திருப்பவரின் உண்மை முகம் என்னவென்று படம் வெளியான பிறகும் கூட யாருக்கும் தெரியவில்லை. யார் சார் இந்த வில்லன்? நடிப்பில் மிரட்டி இருக்கிறாரா என்று சோஷியல் மீடியா தேடியபோதுதான் வில்லனை அறிமுகம் செய்தது படக்குழு. சரவணன் என்பவர்தான் ராட்சசன் வில்லனாக நம்மை மிரட்டி இருந்தார். பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் ராட்சசன் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஒரு த்ரில்லர் படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு ராட்சசன் படமே சாட்சி. அந்த வெற்றிதான் அப்படத்தை ரீமேக்காக பாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ratsasan