ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சோவியத் யூனியனில் 3.48 கோடி பேர் பார்த்த தேவரின் யானை படம்

சோவியத் யூனியனில் 3.48 கோடி பேர் பார்த்த தேவரின் யானை படம்

ஹாத்தி மேரே சாத்தி

ஹாத்தி மேரே சாத்தி

ஹாத்தி மேரே சாத்தி அன்றைய காலகட்டத்தில் 16 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. 2020 மதிப்பின்படி இது 940 கோடிகள். இன்றைய கணக்கில் 1000 கோடிகளை தாண்டிவிடும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா திரைப்படம் வடஇந்தியாவில் வரவேற்பை பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் எனலாம். அதன் பிறகு ஏவிஎம் போன்ற தென்னிந்திய நிறுவனங்கள் இந்தியில் படங்கள் தயாரித்தன. அதில் பல வெற்றியும் பெற்றன. அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது தேவரின் இந்தி வருகை.

சாண்டோ சின்னப்ப தேவருக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கிலம் அரைகுறை. இந்தி சுத்தம். ஆனால், அது பற்றி கவலைப்படுகிற ஆள் இல்லை தேவர். அவருக்குத் தெரிந்த சர்வதேச மொழி ஒன்று இருந்தது. பணம். இந்தியில் படம் தயாரிப்பது என முடிவானதும், அப்போது இந்தியின் நம்பர் ஒன் நடிகராக இருந்த ராஜேஷ் கன்னாவை ஒப்பந்தம் செய்வது என்று தீர்மானித்தார். அவர் ஒருபோதும் பார்த்திராத பெரும்தொகையை அளித்தார் தேவர். தனது கனவு இல்லமான ஆசீர்வாத்தை அப்போது கட்டிக் கொண்டிருந்தார் ராஜேஷ் கன்னா. அந்த வீடு கட்டி முடிப்பதற்கான தொகையை தேவர் தந்திருந்தார். அதை இழக்க அவர் விரும்பவில்லை.

பிரச்சனை தேவர் சொன்ன கதை. 1967 இல் தேவர் கதை எழுதி, தயாரித்த தெய்வச் செயல் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக திட்டம். கதை ராஜேஷ் கன்னாவுக்கு பிடிக்கவில்லை. வந்த பணத்தை விடவும் மனமில்லை. அவருக்கு நினைவுக்கு வந்தவர் திரைக்கதையாசிரியர் சலீம் கான். தேவர் தந்த பணம் எனக்கு வேண்டும். எப்படியாவது இந்தத் தமிழ்ப் படத்தின் கதையை சுவாரஸியமான திரைக்கதையாக்கி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சலீம் இன்னொரு திரைக்கதையாசிரியர் ஜாவேத் அக்தருடன் இணைந்து திரைக்கதை எழுதினார். சலீம் - ஜாவேத் என்ற திரைக்கதை ஜோடி திரையில் முதல்முறை அங்கீகாரம் பெற்றது இந்தப் படத்தில்தான்.

தேவரின் இளைய தம்பி எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஹாத்தி மேரே சாத்தி தயாரானது. 1971 மே ஒன்று உழைப்பாளர் தினத்தன்று வெளியான படம் இந்தியில் பட்டையை கிளப்பியது. மக்கள் பழியாய் கிடந்து படத்தைப் பார்த்தனர். கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் திரையரங்கின் முன் தூளிகட்டி காத்திருந்த காட்சியை நாகிரெட்டி பார்த்து வந்து, தேவரிடம் வியந்து கூறினார். இதுவரை இப்படியொரு வெற்றியை பார்த்ததில்லை என நாகிரெட்டி வாயால் கேட்ட தேவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

Also read... பள்ளிகளில் காதலிப்பது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்க்க வேண்டும் - நடிகர் தாமு

இந்தப் படம் அப்போதைய சோவியத் ரஷ்யாவில் திரையிடப்பட்டது. இந்தியா போலவே அங்கும் படத்தைக் காண மக்கள் திரண்டனர். சுமார் 3 கோடியே 48 லட்சம் பேர் சோவியத் யூனியனில் ஹாத்தி மேரே சாத்தியை கண்டு களித்தனர். அதுவொரு சாதனை. இன்னும் முறியடிக்கப்படவில்லை.

ஹாத்தி மேரே சாத்தி அன்றைய காலகட்டத்தில் 16 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. 2020 மதிப்பின்படி இது 940 கோடிகள். இன்றைய கணக்கில் 1000 கோடிகளை தாண்டிவிடும். ஹாத்தி மேரே சாத்தியின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்தை தேவர் தமிழில் எடுத்தார். எம்ஜிஆர், கே.ஆர்.விஜயா நடித்த அப்படம் இங்கும் வெற்றி பெற்றது. அதுதான் நல்ல நேரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment