2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள்... முதலிடத்தில் அஜித்!

2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள்... முதலிடத்தில் அஜித்!
அஜித்
  • Share this:
அஜித்குமாருக்கு, 2019-ம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. 2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் அஜித். 2017-ம் ஆண்டு வெளியான விவேகம் போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், 2018-ம் ஆண்டு அஜித் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையை உடைத்த விஸ்வாசம், வசூலிலும் பேட்ட படத்தின் சாதனையை முறியடித்தது.




விஸ்வாசம் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று அஜித்தை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றாலும், உடனடியாக மீண்டும் வசூலை மையப்படுத்திய படத்தில் நடிக்காமல் பெண்கள் எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித்.

ரஜினிகாந்தின் திரைப்படத்துக்கு எதிராக தனது படத்தை ரிலீஸ் செய்து தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கியதற்காகவும், தனது சமூக அக்கறையை திரையில் வலுவாக பேசியதற்காகவும் டாப் 5 நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் நடிகர் அஜித்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வசூலைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் முன்னேற்றம், ஆசிட் வீச்சுக்கு எதிரான கருத்து உள்ளிட்டவற்றை பேசியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் வினையூக்கியாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையை விரிவுபடுத்தும் வண்ணம் வசூல் சாதனை படைத்திருக்கும் விஜய்க்கு இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்தக் கூட்டணி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் உள்ளிட்டவர்கள் நடத்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் பேட்ட படம் வெளியானது. ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் 250 கோடி வசூலைக் குவித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கான உலக சந்தையை விரிவுபடுத்திக் கொடுத்தது.



70 வயதைக் கடந்த போதும் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களுக்கு வியப்பை அளித்த நிலையில் ரஜினிகாந்தின் 44-வது ஆண்டுகால திரைவாழ்க்கையில் அவர் நடித்த சிறந்த காட்சிகளின் மறு உருவாக்கமாக கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

இதன் மூலமாக 2000-க்கு பின் பிறந்தவர்கள் ரஜினிகாந்தின் புகழை அறிய வாய்ப்பாகவும் அமைந்தது இந்தப் படம். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இளம் போட்டியாக தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி உலக அரங்கில் மீண்டும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் அற்புதமான நடிகர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் தனுஷுக்கு அசுரன் திரைப்படம் சரியான தீனியாக அமைந்திருந்தது. அசுரன் திரைப்படத்தில் வயதான சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் அக்கதாபாத்திரத்தின் தன்மையை கண் முன் நிறுத்தியிருந்தார். இதனால் பலரது பாராட்டையும் பெற்றார் தனுஷ்.



முன்னணி நடிகர்கள் தன்னை விட குறைந்த வயது கதாபாத்திரத்தையே அதிகம் தேர்ந்தெடுத்து நடிக்கும் நிலையில் வயதான சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் இம்முயற்சி ஒரு நடிகராக அவரை மிகப்பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும் இந்தப் படம் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல்முறையாக ரூ.100 கோடி வசூலித்த படமாகவும், தனுஷின் திரைத்துறை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான மற்றொரு தனுஷ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே அசுரன் படத்தில் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகர் தனுஷுக்கு இந்தப் பட்டியலில் 4-ம் இடம் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் வெளியாகின. இதில் பிகில் படத்துடன் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. பாடல்கள், நாயகி என வழக்கமான தமிழ் சினிமா வரையறைகளைத் உடைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற போதும் அடுத்தடுத்து பலரது பாராட்டையும் பெற்றன.



அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படமும் குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியாகவும் வெற்றி நாயகனாக தடம் பதித்திருக்கும் கார்த்திக்கு 2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள் பட்டியலில் 5-ம் இடம் கிடைத்துள்ளது.
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading