இரண்டாயிரத்துக்கு முன்புவரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அரை டஜன் படங்களுக்கு மேல் வெளியாகும். அதில் நான்காவது முன்னணி நடிகர்களின் படங்களாக இருக்கும். திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் இருந்ததில்லை. ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் முறை வந்த பிறகு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலே திரையரங்குகளுக்காக அடித்துக் கொள்ளும் நிலை. வரும் பொங்கலுக்கு இரண்டே படங்கள்தான் வெளியாகின்றன. அதற்கே அடிதடி.
1994 இல் கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், பிரபு ஆகிய ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகின. அத்துடன் இரண்டு சின்னப் படங்களும் இணைய மொத்தம் 7 திரைப்படங்களுடன் பொங்கல் களைகட்டியது.
மகாநதி: கமல் கதை, திரைக்கதை எழுத, ரா.கி.ரங்கராஜன் வசனத்தில், சந்தானபாரதி இயக்கத்தில் 1994 பொங்கலுக்கு மகாநதி வெளியானது. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சாமானியன் எப்படி ஏமாற்றப்படுகிறான், அவனது குடும்பம் எப்படி சிதறடிக்கப்படுகிறது. அந்த காயங்களுடன் அவனது குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக மகாநதி சொன்னது. ஹீரோயிசமின்றி கமல் துணிச்சலாக எடுத்தப் படம் மெதுவாக பிக்கப்பாகி 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.
சேதுபதி ஐபிஎஸ்: பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா நடித்த சேதுபதி ஐபிஎஸ் 1994 பொங்கலுக்கு வெளியானது. விஜயகாந்திற்கென்று அளவெடுத்து தைத்த போலீஸ் கதாபாத்திரம். அடிதடியுடன், தங்கை சென்டிமெண்டை சரிவிகிதத்தில் கலந்து படத்தை பி.வாசு தந்திருந்தார். 'கப்பல் திடீர்னு நின்னுச்சுன்னா இறங்கி தள்ளணும்.. ' 'நான் தள்ளுனா என் சம்பளத்தை யார்டா வாங்கறது...?' என்ற கவுண்டமணி, செந்தில் எவர்கிரீன் காமெடி இடம்பெற்ற திரைப்படம். 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.
அமைதிப்படை: மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை, 1994 பொங்கலின் பேசும் படமானது. சத்யராஜின் நக்கலும், அல்வா காட்சியும் மறக்க முடியாத சம்பவங்களாயின. அவரது கரியரில் அமாவாசை கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று. தமிழக அரசியல் எப்படி இருக்கிறது என்ற சாமானியனின் மனப்பதிவை பிரதிபலிக்கும் வகையில் மணிவண்ணன் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்ததும், சத்யராஜின் நக்கல் தொனிக்கும் நடிப்பும் படத்தை மெகா ஹிட்டாக்கின. படம் 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது.
வீட்ல விசேஷங்க: பாக்யராஜ், பிரகதி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷங்க 1994 பொங்கலின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு. மனைவியை இழந்து, கைக்குழந்தையுடன் வசிக்கும் பாக்யராஜின் பொறுப்பில், அம்னீஷியா நோயாளியான பிரகதியை ஜனகராஜ் வம்படியாக தள்ளிவிடுவார். பாக்யராஜின் மனைவி என்று அவர்கூடவே இருப்பார் பிரகதி. பாக்யராஜுக்கு உண்மையை சொல்ல முடியாத நிலை. மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுடன் போட்டியிட்டு வீட்ல விசேஷங்க படமும் 100 நாள் ஓடியது.
ராஜகுமாரன்: பிரபுவின் 100 வது படம் என்று ஆர்ப்பாட்டமாக ராஜகுமாரன் வெளியானது. மீனா, நதியா என்று இரு நாயகிகள். கவுண்டமணி , செந்திலுடன் வடிவேலும் காமெடிக்கு உண்டு. இளையராஜாவின் பாடல்கள். அனைத்தும் இருந்தும் ஆர்.வி.உதயகுமாரின் சுமார் கதை, திரைக்கதையால் படம் பேசப்படவில்லை. சிவாஜி ரசிகர்கள் அதிகம் உள்ள நாகர்கோவிலில் மட்டும் ஒரு திரையரங்கில் ராஜகுமாரன் 100 நாள்கள் ஓடியது (அதாவது ஓட்டப்பட்டது).
இந்த ஐந்து படங்களுடன் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் செந்தமிழன் இயக்கிய சிந்துநதி பூ, சிவகுமார், விஜயகுமார் நடித்த சிறகடிக்க ஆசை ஆகிய படங்களும் வெளியாகின.
ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி, அதில் நான்கு வெற்றிப் படங்களாகும் காலம் இனிமேல் தமிழ் சினிமாவுக்கு ஒருபோதும் வாய்க்கப் போவதில்லை.
Also read... திரைக்கதை மன்னன்.. அடுத்தடுத்து வெற்றி.. சொல்லி அடித்த கில்லி இயக்குநர் பாக்கியராஜ் கதை!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment