Home /News /entertainment /

பா ரஞ்சித் இயக்குனராகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவு.. அவர் கடந்து வந்த பாதை!

பா ரஞ்சித் இயக்குனராகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவு.. அவர் கடந்து வந்த பாதை!

பா ரஞ்சித்

பா ரஞ்சித்

தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் கதாநாயகர்களாக, கதை மாந்தர்களாக இடம்பெற்ற திரைப்படங்கள் வெகு சொற்பமாகவே வந்துகொண்டிருந்தன. அதை ரஞ்சித்தின் சினிமா வருகை மாற்றியமைத்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இயக்குநர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அவர் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வந்தது.

  தினேஷ் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றது. முதன் முதலாகத் திரையில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளின் தலித் மக்களின் வாழ்வியலை இப்படம் பேசியது. அதன் பின்பு ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் 2014-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்தது. இந்த படம் மாபெரும் அரசியல் கட்சிகள் செய்துகொள்ளும் திரை மறைவு ஒப்பந்தங்களால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் எப்படி பலியாடுகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதைப் பேசியது. இது ரஞ்சித்துக்கு ஒரு தனித்துவமான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.

  அதன் பின்பு ரஞ்சித்தின் வளர்ச்சி ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா இயக்கியபோது அசுர வளர்ச்சியாக மாறியது. யாரும் எதிர்பாரா வண்ணம் ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை அவர் இயக்கினார். அதே வேளையில் அம்பேத்கரின் எழுத்துகளின் மீது தீவிர பற்றுள்ள அவர் பொது வெளியிலும், பேட்டிகளிலும் தன்னுடைய அரசியலை வெளிப்படையாக, அழுத்தந்திருத்தமாக பேசினார். இது பல நேரங்களில் சர்ச்சையாகவும் மாறின.

  ரஜினியுடன் கபாலி படப்படிப்பில் பா.ரஞ்சித்.


  அதற்கு முன்பு வரை வியாபாரத்தை மையமாக வைத்து இயங்கும் தமிழ் சினிமாவில், இயக்குநர்கள் யாரும் இவ்வளவு காத்திரமாக தங்களுடைய அரசியல் கருத்துகளைப் பொதுத்தளங்களில் எடுத்துரைத்தது இல்லை.

  படங்கள் இயக்கிக்கொண்டிருந்த அதே வேளையில் ரஞ்சித் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாளை தயாரித்து வெளியிட்டார். அத்திரைப்படம் கவனிக்கப்பட வேண்டிய வெற்றியை அடைந்ததோடு மட்டுமில்லாமல், சாதி குறித்த பல்வேறு விவாதங்களையும் எழுப்பியது. நீலம் புரொடெக்‌ஷன் மூலமாகத் தொடர்ந்து பல புதிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் களம் கண்டு வருகின்றனர்.

  கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினருடன் பா.ரஞ்சித்.


  அதே போல் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற பெயரில் இவர் தொடங்கிய இசைக்குழு சுயாதீன இசைக்கு தமிழ்ச் சூழலில் ஒரு பாய்ச்சலை கொடுத்துள்ளது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள அறிவு இன்று இந்தியாவின் முக்கியமான ரேப் இசைப் பாடகர்களில் ஒருவர். அதே போல் வால மீனு விளாங்க மீனு பாடலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கானாப் பாடல்களை மீண்டும் இடம்பெற வைத்து அதற்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும் ரஞ்சித்தே பெற்றுத்தந்துள்ளார்.

  இதற்கிடையே நீலம் பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தையும் தொடங்கி அதன் மூலம் பல கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொண்டு வருகிறார் ரஞ்சித். நீலம் என்ற மாதாந்திர இதழையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

  சென்ற ஆண்டு ரஞ்சித் எழுதி இயக்கி தயாரித்த சார்பட்டா பரம்பரை அமேஸான் பிரைமில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து வெளி வந்த அத்தனைத் திரைப்படங்களையும் இப்படம் பின்னுக்கு தள்ளியது. வழக்கத்துக்கு மாறாக கதாநாயகர்களையும் தாண்டி துணை கதாப்பாத்திரங்களும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன.

  ‘சார்பட்டா பரம்பரை’ படப்படிப்பில் பா.ரஞ்சித்.


  தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் கதாநாயகர்களாக, கதை மாந்தர்களாக இடம்பெற்ற திரைப்படங்கள் வெகு சொற்பமாகவே வந்துகொண்டிருந்தன. அதை ரஞ்சித்தின் சினிமா வருகை மாற்றியமைத்தது. அரசியல் பிரக்ஞையோடு தங்கள் திரைக்கதைகளைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குநர்களை ரஞ்சித்தின் திரைப்படங்கள் உட்படுத்தியுள்ளன என இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

  தன்னுடைய அரசியலைத் தொடர்ந்து தன் சினிமா மூலம் பேசி வருவதால் தேசிய அளவிலேயே ரஞ்சித் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். அவருடைய நட்சத்திரங்கள் நகர்கின்றன என்ற திரைப்படம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது. தற்போது விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை ரஞ்சித் இயக்கிவருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Cinema, Pa. ranjith

  அடுத்த செய்தி