திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது புஷ்பா திரைப்படம். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்த இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய வெளியீடாக திரைக்கு வந்தது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது. குறிப்பாக, இந்தப் படத்தில் வந்த ‘ஓ சொல்றியா மாமா’ ‘ஸ்ரீ வள்ளி’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலாகின. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இந்தப் பாடல்களுக்கு நடனமாடத் தொடங்கினர். அதுகுறித்து வீடியோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தன.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோரும் கூட புஷ்பா பட பாடல் மற்றும் வசனங்களுக்கு நடனமாடியும், டப்பிங் கொடுத்தும் வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களின் மனங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த புஷ்பா திரைப்பட ‘ஜுரம்’ தற்போது சற்று ஓய்ந்திருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் வசனம் இணையத்தில் வலம் வர தொடங்கியிருக்கிறது.
விடைத்தாளில் புஷ்பா பட வசனம் :
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான விடைத்தாளில், மாணவர் ஒருவர் “புஷ்பா, புஷ்ப ராஜ், விடை எழுதப் போவதில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் அவ்வபோது, இதுபோன்ற வசனம் ஒன்றை பேசுவார். எதிரிகளிடம் சவால் விடுக்கும்போது, “நான் புஷ்பா, புஷ்பராஜ், புஷ்பா என்றால் பிளவர்னு (பூ) நினைச்சீங்களா, ஃபையர் (நெருப்பு)’’ என்று கூறுவார். அதை மையப்படுத்தி தான் இந்த மாணவர் தேர்வுத் தாளில் எழுதியுள்ளார்.
also read : கே.ஜி.எஃப் 2 உடன் போட்டியிடாமல் ரிலீசை ஒத்தி வைத்தது முன்னணி நடிகரின் படம்
கவலையும், கொண்டாட்டமும் :
தேர்வுக்கான விடைத்தாளில் திரைப்பட வசனம் எழுதும் அளவுக்கு கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கல்வியாளர்கள் பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மற்றொரு புறம், நெட்டிசன்கள் இந்தச் செய்தியை கொண்டாடி வருகின்றனர். விடைத்தாளின் குறிப்பிட்ட பகுதி இணையதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், “புஷ்பா, புஷ்பா ராஜ்’’ வசனத்திற்கு ரீல்ஸ் செய்து பலர் இன்ஸ்டாகிராமில் மீண்டும் வீடியோ வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.
also read : நடிகை காஜல் அகர்வாலின் கர்ப்பகால போட்டோ ஷூட்- வைரலாகும் புகைப்படங்கள்
முழு விடைத்தாளிலும் இதுதான் பதில்?
புஷ்பா திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் பெரும் புயலை கிளப்பிச் சென்றது என்றால் அது மிகையில்லை. பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் அந்தப் படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் அவை குறித்த ரீல்ஸ், டிக் டாக் வீடியோ உள்ளிட்டவை பெரும் திரளாக வலம் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், தேர்வுக்கான விடைத்தாளில் எழுதும் அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, விடைத்தாளில் வேறு எந்த பதிலையும் எழுதாமல், இந்த ஒரே வசனத்தை விடைத்தாள் முழுவதும் அந்த மாணவன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.