நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கும் படக்குழு ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க இருக்கும் சியான் 60 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோப்ரா படப்பிடிப்பை முடித்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் தேதிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 7 சி.எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக லலித்குமார் தயாரிக்கும் ‘சியான் 60’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.