ஹேம்நாத் ஜாமினை எதிர்த்து நண்பர் மனு.. இறுதியாக பேசிய ஆடியோவில் இருவரும் கூறிக்கொண்டது என்ன? (வீடியோ)

Youtube Video

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு ஜாமின் வழங்கக் கூடாது என அவரது நீண்ட கால நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஹேம்நாத்துடன் தான் பேசிய ஆடியோவையும் சமர்ப்பித்துள்ளார். ஆடியோவில் ஹேம்நாத் சொன்னதென்ன?

  • Share this:
    சித்ரா மறைந்து 40 நாட்களுக்கு மேலான நிலையில், அவரது மரண வழக்கில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சித்ராவின் கணவர் ஹேம்நாத் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என நீண்ட கால நண்பர் ஒருவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஹேம்நாத்தின் நண்பரே அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்?

    நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், டிசம்பர் 14ம் தேதி சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். ஹேம்நாத்தின் ஜாமீன் மனு, திங்கட்கிழமை அன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, பதில்மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஹேம்நாத்தின் 10 ஆண்டுக் கால நண்பரான சையது ரோஹித் என்பவர், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுவை திங்கட்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் ஹேம்நாத் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஹேம்நாத் ஆரம்ப காலங்களில் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

    சென்னை நகரில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நகரின் முக்கியமான பெரிய தியேட்டர்களில் சினிமாக்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டார் ஹேம்நாத் என்றும் குறிப்பிட்டுள்ளார்

    அந்த வகையில் தான் அவருக்கு சித்ரா உடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், நாளடைவில் அவரது காதல் வலையில் சித்ரா விழுந்தார் என்றும் தெரிவித்துள்ளார். சித்ரா திருமணத்திற்கு சம்மதித்த பின், அவரது நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஹேம்நாத் துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    சித்ராவின் மரணத்திற்குப் பின் ஹேம்நாத்துடன் தான் பேசிய ஆடியோவை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சையது ரோஹித், தனியார் டிவியில் நடன நிகழ்ச்சி குறித்து தான் கேட்டபோது ஹேம்நாத் மழுப்பி விட்டதாகவும் ஆனால் அந்த சம்பவத்தை வைத்து தான் சித்ராவுடன் அவர் போதையில் சண்டை போட்டிருக்க வேண்டும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று தான் சித்ராவைத் தொடக் கூட இல்லை என்றும், அவரது தாய் ஏதோ பேசியதால் தான் தற்கொலை முடிவுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் ஹேம்நாத் திசை திருப்ப முயன்றதாகவும் சையது ரோஹித் குற்றம்சாட்டியுள்ளர்.

    சம்பவத்தன்று, தான் வெளியில் இருந்த நிலையில், சித்ரா திடீரென அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டதாகவும் அதன்பின்பே அவர் துாக்கிட்டது தெரியவந்தது என்றும் ஹேம்நாத் கூறியதாகவும், ஆனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததால் தான் சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருக்க வேண்டும் எனத் தான் கருதுவதாகவும் கூறியுள்ளார் சையது ரோஹித்.

    தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், சித்ராவின் தலையில் காயம் இருந்ததாகவும் அதை ஹேம்நாத் உறுதிபடுத்தியதாகவும் கூறியுள்ளார். தனது மகனை வழக்கில் இருந்து காப்பாற்றும் நோக்கில் ஹேம்நாத்தின் தந்தை, சித்ராவின் நடத்தை குறித்து தவறான தகவல்களை ஊடகங்களில் வேண்டும் என்றே பரப்பி வருவதாகவும், தான் அறிந்த வரையில் சித்ரா நல்ல பண்புள்ள, இரக்கமுள்ள, வாழ வேண்டும் என்ற ஆசையுள்ள பெண்ணாகவே இருந்தார் என்றும் சையது ரோஹித் கூறியுள்ளார்.

    இதுவரை போலீசார் தன்னை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் அழைத்தால் ஒத்துழைப்பு தருவதாகவும் சையது ரோஹி்த் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாரதிதாசன், அதன் மீதான விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

    சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நீண்ட கால நண்பரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது, சின்னத்திரை வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: