திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் மறுப்பு!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் மறுப்பு!

திரையரங்குகள்

திரையரங்குகளை இயக்கும் விவகாரத்தில் ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பு மருந்து முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்வரை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க வேண்டுமென்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. அதன்படி 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயக்கலாம் என தலைமை செயலாளர் ஜனவரி 4ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை முழுமையாக அனுமதிக்கும் உத்தரவை ரத்து செய்து, தனி மனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பிரபு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இதேபோல மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 11 வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், மாநிலத்தின் நிலை மேம்பட்டுள்ளதாலும், கட்டுப்பாடுகளை தொடர அவசியமில்லை என்பதாலேயே 100 சதவீத இருக்கையை அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

Also read... மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, கொரோனா கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போலவும் மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டுமெனவும் அரசுக்கு அறிவுத்தினர். கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என தெரிவித்தனர்.

திரையரங்குகளை இயக்கும் விவகாரத்தில் ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சென்னையில் தொடரப்பட்ட இந்த வழக்கும், மதுரை கிளையிலேயே சேர்த்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: