திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க முடியாது - சென்னை உயர் நீதி மன்றம்

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க முடியாது - சென்னை உயர் நீதி மன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

 • Share this:
  திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்குவது நல்லதல்ல என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், 100% இருக்கைக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ரிலீஸுக்கு தயாராகியிருந்த விஜய்யின் ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஜோதிகாவின் ‘பொன் மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண் குயின்’, ‘மிஸ் இந்தியா’, விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உள்லிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

  இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதியிலிருந்து திரையரங்குகள் திறக்கப்படவும், 50% பார்வையாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 31-ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கவும் அனுமதியளிக்கப்படுவதாக கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தன.

  பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது, தொற்று நோய் எளிதில் பரவ வழி வகுக்கும் என்பதால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் பிரபு என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.

  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இதேபோல மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 11 வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், மாநிலத்தின் நிலை மேம்பட்டுள்ளதாலும், கட்டுப்பாடுகளை தொடர அவசியமில்லை என்பதாலேயே 100 சதவீத இருக்கையை அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

  அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, கொரோனா கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போல மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டுமெனவும் அரசுக்கு அறிவுத்தினர். கல்வி நிலையங்கள் திறக்கப்பட அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என தெரிவித்தனர்.

  திரையரங்குகளை இயக்கும் விவகாரத்தில் ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  சென்னையில் தொடரப்பட்ட இந்த வழக்கையும், மதுரை கிளையிலேயே சேர்த்து விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: