மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், கேரளா முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. பாதுகாப்பு கருதி 80 அணைகள் திறக்கப்பட்டதால் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்பால் மட்டும் 10,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 2200 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள அரசு கேட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை ரூ. 600 கோடியை முதற்கட்டமாக அம்மாநிலத்துக்கு அளித்துள்ளது.
கேரள மக்களின் நிலையை கருத்தில்கொண்டு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக பணத்தை வங்கியில் செலுத்தியும் , நேரடியாக சந்தித்தும் கொடுத்து வருகின்றனர். ஆனால் நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவியை நேரடியாக அளிக்காமல் கேரளாவிலுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தார்.
இதே பாணியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் யுனிசெப் அமைப்புக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் ரூ. 4.20 கோடி) வழங்கியுள்ளார். இந்த தொகையை அவரது அறக்கட்டளையான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், ‘கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். யுனிசெப்பும், இதர தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் வெள்ளம் காரணமாக நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படும் என நம்புகிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.