மாஸ்டர் பட முதல் பாடலுக்கு ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன் டிரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள படக்குழு, விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கும் குட்டி ஸ்டோரி பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடல் யூடியூப் அதிக பார்வைகளைப் பெற்று யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கும் ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக், சிறப்பான இசை வீடியோ என்று கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
பிரிடேட்டர், எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் பில் டியூக், ஹாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சமீபகாலமாக இந்தியத் திரையுலகினருடன் இணைந்து பணிபுரிய விரும்புவதாக பில் டியூக் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.