Bigil | பிகில் படக்குழுவினர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் (வீடியோ)

Youtube Video

பிகில் குழு தொடர்புடைய வழக்கில் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வரி ஏய்ப்பு குற்றசாட்டு உண்மையா?

  • Share this:
    விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.. ஆனால், இந்த படத்தில் கிடைத்த லாபத்தை முறையாக வரிக்கணக்கில் காட்டவில்லை என்ற புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச் செல்வன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய 30 இடங்களில் அதிரடியாக வருமானவரித்துறை சோதனை செய்தது. விசாரணையில் தற்போதைய நிலை என்ன?

    நடிகர் விஜயின் வீடு, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செல்வனின் வீடு உள்ளிட்ட பிகில் படக்குழுவுடன் தொடர்புடைய 30 இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜயை, கடலூரிலிருந்து அழைத்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் வைத்து விசாரித்தனர். பைனான்சியர் அன்புச் செல்வன் தொடர்புடைய இடங்களிலிருந்து சோதனையின் போது கணக்கில்வராத ரூ77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல், ஏராளமான வரவு செலவு, முதலீடு ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், இதுவரை 35 பேரின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், 1,200 பக்க ஆதாரங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    சோதனை நடந்து 10 மாதங்களுக்கு பிறகு, விசாரணை முடித்த வருமானவரி புலனாய்வு பிரிவு, இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறது. எந்த நேரத்திலும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில் ரூ.180 கோடியில் தயாரிக்கப்பட்ட பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கலாகும் இறுதி அறிக்கையில் பல அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

    சூடுபிடிக்கும் பிகில் விசாரணை-வீடியோ

    மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே, பிகில் வருமானவரித்துறை வழக்கில் இறுதி அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை சம்மன் செய்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் விசாரணை நடத்தி, தீர்ப்பு அளிக்கும்.



    கணக்கில் காட்டப்படாத வருவாய் குறித்து ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ள நிலையில், இந்த தகவல் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: