2017-ம் ஆண்டு கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் முஃப்தி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் நரதன் இயக்கி வந்தார். தொடர்ந்து தாமதமானதால் தனது அடுத்த படத்தில் பிஸியானார் நரதன். இதனால் முஃப்தி தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ‘பத்து தல’ என்று பெயரிப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வரும் சிலம்பரசன் அதைத்தொடர்ந்து ‘ பத்து தல’ படத்தில் தேதிகள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.
‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக்கை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் ஆரி அர்ஜூனன், “நெடுஞ்சாலை இயக்குநர் கிருஷ்ணாவின் அடுத்த படமான ‘பத்து தல’ படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். சிம்பு, கிருஷ்ணா, கவுதம் கார்த்திக் ஆகியோரின் ஆட்டத்தைக் காண காத்திருக்கிறேன்.” என்று ஆரி கூறியுள்ளார்.
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.